டிஎன்பிஎஸ்சி: சிபிசிஐடி விசாரணைக்குத் தடை போடும் விஐபிக்கள்!

Published On:

| By Balaji

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2 ஏ , குரூப் 4 ஆகிய தேர்வுகளில் 2016ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடுகள் நடந்தது அண்மையில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றின் அடிப்படையில் விசாரணையை முடக்கிவிட முடியாத நிலையில் இருக்கிறது சிபிஐசிடி.

இதுகுறித்து நாம் விசாரித்த போது. “ஜெயக்குமார் வெறும் இடைத்தரகர்தான், அப்படி என்றால் முறைகேடுகளுக்குக் காரணமான முக்கியமான ஆசாமிகள் யார் என்று களமிறங்கியது சிபிசிஐடி. முறைகேடுகளில் முக்கிய பங்குள்ளவர் விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேன் செய்யும் செல்வக்குமார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் செல்வகுமாரை நெருங்க முடியாத அளவுக்கு மதுரை அதிமுகவில் அதிகாரம் படைத்தவர்கள் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அதனால் விசாரணை அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்க முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

மேலும், “சிவகங்கையைச் சேர்ந்த செல்வக்குமார், சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை ஸ்கேனிங் செய்யும், எஸ்.வி.என் இமேஜிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பொதுவாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் விடைத்தாள்களை பிரிண்ட்டிங் செய்யவும், ஸ்கேனிங் செய்யவும் டெண்டர் விடுவார்கள். இந்த டெண்டர் தனக்கே கிடைக்க அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் இரண்டு டம்மி நிறுவன முகவரிகளில் டெண்டர் விண்ணப்பிப்பது செல்வக்குமாரின் வழக்கம். இந்தவகையில்,ARN சிஸ்டம்ஸ், எண் 3, ஸ்டேட் பேங்க் ஸ்டாப் காலனி, ஆளவந்தார் நகர், சென்னை 92 என்ற பெயரிலும், ஸ்மார்ட் எண்டர் பிரைசஸ், எண் 10, காந்தி வீதி நசரேத் பேட், சென்னை 103 என்ற பெயரிலும் டம்மியான முகவரியை வைத்து டெண்டர் போட்டுள்ளார். இந்த முகவரியில் எந்த நிறுவனமும் இருக்காது என்பது டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் இதைக்காட்டி எஸ்.வி.என் இமேஜிங் பிரேவேட் லிமிடெட் செல்வக்குமாருக்கு டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் கேட்பதைக் கொடுத்து அசத்தக்கூடியவர் செல்வக்குமார், அப்படிப்பட்டவரை சிபிசிஐடியிடம் எப்படி சிக்கவைப்பார்கள்” என்கிறார்கள்

**மின்னம்பலம் டீம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share