டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவான முக்கிய குற்றவாளி!

Published On:

| By Balaji

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடைய விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் நிறுவனத்தை நடத்தி வரும் செல்வக்குமார் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் தலைமையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தினசரி கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. மேலும் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளியாகின்றன. இந்த முறைகேட்டில் சென்னை காட்டுப்பாக்கத்தில், டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் செல்வகுமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முதன் முதலில் மின்னம்பலத்தில், [டிஎன்பிஎஸ்சி மோசடி: வெளியாகாத காட்டுப்பாக்கம் ரகசியம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/02/25/tnpsc-scam-kattuppakkam-secret) என்ற தலைப்பில் பிப்ரவரி 2ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், ”டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 விடைத்தாள் அச்சடிப்பவரும் ஸ்கேன் செய்பவரும் ஒரே நபர்தான். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை 56, காட்டுப்பாக்கம் பகுதியில் எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் என்ற நிறுவனம் வைத்துள்ளார். இங்கேதான் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை டெண்டர் எடுத்து அச்சடித்து வருகிறார். இவரைக் கைது செய்து விசாரித்தால் பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தோம்.

அதுபோன்று பிப்ரவரி 25ஆம் தேதி [டிஎன்பிஎஸ்சி: சிபிசிஐடி விசாரணைக்குத் தடை போடும் விஐபிக்கள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/25/55/tnpsc-scam-cbcid%20-investigation) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், ”டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் வெறும் இடைத்தரகர்தான், ஆனால் எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் நிறுவனம் நடத்தி வரும் செல்வக்குமாருக்கு முறைகேட்டில் முக்கிய பங்கு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளன. ARN சிஸ்டம்ஸ், எண் 3, ஸ்டேட் பேங்க் ஸ்டாப் காலனி, ஆளவந்தார் நகர், சென்னை 92 என்ற பெயரிலும், ஸ்மார்ட் எண்டர் பிரைசஸ், எண் 10, காந்தி வீதி நசரேத் பேட், சென்னை 103 என்ற பெயரிலும் டம்மியான முகவரியை வைத்து செல்வக்குமார் டெண்டர் போடுகிறார். இது டம்மி முகவரி என டிஎன்பிஎஸ்சி உயரதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தாலும், இதனைகாட்டி விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் செய்வதற்கு எஸ்விஎன் இமேஜிங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த புகார் வெளிச்சத்துக்கு வந்தும், அவரை கைது செய்ய முடியாத அளவுக்கு மதுரை அதிமுகவில் அதிகாரம் படைத்தவர்கள் சிபிசிஐடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் ”என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் ”ஜெயக்குமாரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தபோது, ’நண்பர்கள் மூலமாக செல்வக்குமாரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் சில பேப்பர்கள் ஜெராக்ஸ் எடுக்க செல்வோம் அப்போதுதான் நெருக்கம் ஏற்பட்டது. டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு அவரும் முக்கிய காரணம்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்” என்று சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் , ஐஜி, எஸ்பிக்கள், மற்றும் விசாரணை அதிகாரியான இரண்டு டிஎஸ்பிகளை அழைத்து இதுகுறித்து ஆலோசனை நடத்தி, முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை ரகசியமாகக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு செல்வக்குமார் வாக்குமூலத்தை வைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளையும் கைது செய்யலாம், நீங்கள் சுதந்திரமாக வேலைசெய்யுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் குற்றவாளிகளைக் கைதுசெய்யத் தனிக் குழு ஒன்று, செல்வக்குமாரைத் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. எனவே அவரை விரைவில் கைது செய்யதீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் சிபிசிஐடி போலீசார். செல்வக்குமாரும், ஜெயக்குமார் போல் நீதிமன்றத்தில் சரணடைவார் அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வருவார்கள்” என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**சிபிசிஐடிக்கு கண்டனம்**

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்காமல் கணக்குக்குக் கைதுசெய்கிறீர்களா? உண்மையான குற்றவாளிகளை எப்போது கைது செய்தீர்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share