டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தற்போது சிபிசிஐடி விசாரணை வளையத்தில் இருந்து வருகிறார். பிப்ரவரி 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அவரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
கடந்த 14 நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட விசாரணையை நோக்கிச் செல்ல முடியாமல் சிபிசிஐடி திணறி வருகிறது. இதனிடையே இந்த விசாரணையின்போது ஜெயக்குமார் தனது பின்னணி குறித்து விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்கோட்டைச் சேர்ந்த ஜெயக்குமார், பத்தாம் வகுப்புகூட படித்திருக்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே சென்னைக்கு வந்திருக்கிறார். முதலில் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அதிகாரிகளுக்கும் வெளிமாவட்டங்களில் இருந்து வரக் கூடிய ஆசிரியர்களுக்கும் டீ வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைச் செய்துள்ளார்,
பின்னர், அவர்கள் நட்பு மூலமாக மாற்றுச் சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால் அவற்றை வாங்கிக் கொடுத்து சொற்ப காசு சம்பாதித்தும், அதன்பிறகு இயக்குநர் மூலமாக ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால் சில லட்சங்களையும் பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து பள்ளிக் கல்வித் துறையிலிருந்து டிஎன்பிஎஸ்சியிலும் நுழைய வேண்டும் என்று சவாலாக இங்கு வந்து, அதன்பின் இதுபோன்ற முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக தனது பின்னணி குறித்து ஜெயக்குமார் தெரிவித்ததாக விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேட்டின் போது, வினாத்தாளை எழுதுவதற்கு சில ஆசிரியர்களைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். மாநில அளவில் ஏஜென்டுகளை நியமித்து அவர்கள் மூலமாகப் பல முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிகளில் சம்பாதித்துள்ளார். குறுகிய காலத்தில் அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்புகளும் கிடைத்து டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் தீவிரம் காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் சைக்கிள், பைக், வாடகை காரை பயன்படுத்தி வந்த ஜெயக்குமார் இவ்வாறு முறைகேடு செய்ததன் மூலம் தற்போது ஐந்து கார்களை வாங்கி குவித்திருக்கிறார்.
**-மின்னம்பலம் டீம்**
�,