ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமா?: டிஎன்பிஎஸ்சி!

public

போட்டித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் ஒருமுறை பதிவு / நிரந்தர பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய முடியும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பின்னர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நடைமுறை தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆதார் இணைப்பு காரணத்தால், வரும் ஜனவரி 3ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும் நிலையில் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வதிலும் ஆதார் எண்ணை ஒருமுறை பதிவு ஐடியுடன் இணைப்பதிலும் தேர்வர்கள் சிக்கலைச் சந்தித்தனர்.

இந்தச் சூழலில் நேற்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடக்க உள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வு, ஜனவரி 9,10ஆம் தேதிகளில் நடக்க உள்ள உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய ஆதார் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒருமுறை பதிவு மற்றும் நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய முடியும். தேர்வாணையத்தில் ஒருமுறை பதிவு  ஐடி வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002இல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *