டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஐயப்பன் சரண்டரான பின்னணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் தேர்வுகளில் முறைகேடு நடந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தும் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர்.

முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமார், ஓம்காந்தன், ஐயப்பன் உள்ளிட்டோர் சிபிசிஐடி கஸ்டடியில் இருக்கிறார்கள். இதில் ஐயப்பனுக்கும் ராதாபுரம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவுக்கும் தொடர்பு இருப்பதாக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஐயப்பன் சரண்டரானது எப்படி? வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். இதில், ”திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயபதி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், பூபதி ஆகிய இருவரும் சென்னையில் போலீசாக இருக்கிறார்கள். அவர்களை நான் (ஐயப்பன்) சந்தித்துப் பேசினேன், சென்னையில் போலீசாக இருக்கிறீர்களே, பணம் கொடுத்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற எதாவது வாய்ப்பு இருக்குமா. வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்றேன். இருவரும், விழுப்புரம் மாவட்டத்தில் விஏஒ சக்தி (எ)நாராயணன் இருக்கிறார். அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்துவிட்டனர்.

அதன் பிறகு விஏஓ நாராயணனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தனர்.

இதையடுத்து நாராயணனிடம், 2016ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வை எழுதி வெற்றி பெற எனது உறவினர்கள் ஐந்து பேரிடம் தலா 8 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன். ஆனால் 5 பேரும் தேர்ச்சி பெறவில்லை. பணம் கொடுத்தவர்கள் என்னைத் தொல்லைச் செய்யத் தொடங்கினர். இதனால் மீண்டும் அந்த இரு போலீசார் உதவியுடன் நாராயணனைச் சந்தித்து பணம் கேட்டேன்.

அப்போது நாராயணன், பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறேன் என்று உறுதியளித்தார். உன்னுடைய உறவினர்கள் அல்லது வேறு யாரையாவது குரூப் 2 தேர்வை எழுதச் சொல் என்று சொல்லி என்னை அனுப்பினார்.

அதன்பிறகு நடைபெற்ற குரூப் 2தேர்வில் நாராயணன் உதவியுடன் இருவர் தேர்ச்சியடைந்தனர். அவர்களிடம் இருந்து தலா 8 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று குரூப் 4இல் தேர்ச்சி பெறாத இரண்டு பேருக்கு மட்டும் கொடுத்தேன். அவர்களைத் தொடர்ந்து2019 இல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் நானும் என் நண்பனும் வேலைக்குப் போனோம்” என்று ஐயப்பன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாராயணன் பணம் வாங்கி யாரிடம் கொடுப்பார் என்று விசாரித்ததில் ஜெயக்குமாரிடம் கொடுப்பார், அதனை ஜெயக்குமார் ஜெராக்ஸ் ஸ்கேன் செய்யும் ஒருவர் இருக்கிறார் அவரிடம் கொடுப்பார் என்று ஐயப்பன் கூறியதாகவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**ஐயப்பன் சரண்டரான பின்னணி**

திருநெல்வேலியில் சக்தி கீர்த்தி என்ற சாமியார் உள்ளார். தீராத நோய்களுக்கு மருந்து கொடுப்பது, வாக்கு சொல்வது என அந்த பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். இந்த சாமியாருக்கு நெருக்கமாக ஐயப்பன் இருந்துள்ளார்.

போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போது தலைமைறைவாகயிருந்த ஐயப்பன், சாமியாருடன் மட்டும் தொடர்பில் இருந்துவந்துள்ளார். இதை மோப்பம் பிடித்த சிபிசிஐடி போலீஸார் சாமியாரைப் பிடித்து நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அஞ்சிய சாமியார், “ஐயப்பன் எனக்கு கார் ஓட்டுவார். எப்போதும் என் கூடவே தான் இருப்பார். ஆனால் தற்சமயம் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. எப்படியும் என்னைத் தொடர்பு கொள்வார். அப்போது தகவல் தெரிவிக்கிறேன்” என்று போலீஸுக்கு உறுதியளித்துள்ளார். சில போலீசார் சாமியாரைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இதையடுத்து ஒருநாள் தனக்குத் தொடர்பு கொண்டு பேசிய ஐயப்பனிடம், போலீசார் நெருக்கடி கொடுக்கிறார்கள். நீ என்னிடம் வா, வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகக் கூறி வரவழைத்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஐயப்பன்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஐயப்பனை நேற்று (மார்ச் 2), சிபிசிஐடி போலீஸார் 4 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேசமயம், டிஎன்பிஎஸ்சி விடைத்தாளை ஸ்கேன் மற்றும் பிரிண்ட் செய்ய டெண்டர் எடுத்திருந்த செல்வக்குமாரைக் கைது செய்யத் தயாராக இருப்பதாகவும், மேலிட உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share