பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடங்களை 5ஆக குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது மேல்நிலை வகுப்புகளான பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 6 பாடங்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படவுள்ளது. அதே வேளையில் 600 மதிப்பெண் தேர்வு முறையும் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை நேற்று (செப்டம்பர் 18) வெளியிட்டுள்ள அரசாணையில், “மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி மாணவர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மை பாடங்களில் ஏதேனும் 3 பாடங் களை மட்டும் தேர்வு செய்து எழுதிக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் 4 முதன்மை பாடங்களையும் சேர்த்து எழுதலாம். எனினும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்து எழுதும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 1 வகுப்பில் அமலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம்.பொறியியல் படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். அப்படி இல்லாமல் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களைப் படிக்க வேண்டும்.�,