yதமிழக பெண் எம்.பி மீது மக்களவையில் தாக்குதல்!

Published On:

| By Balaji

நாடாளுமன்ற பெண் எம்.பிக்களான ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் அவைக்காவலர்களால் பிடித்து தள்ளப்பட்டதை தொடர்ந்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.

இன்று காலை தொடங்கிய மக்களவையில், காங்கிரஸ், என்சிபி, சிவசேனா எம்.பி.க்கள் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்றதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அவை தொடங்கியதில் இருந்தே எம்.பி.க்களின் முழக்கத்தால் அவையில் கடும் அமளி நிலவியது. மூன்று கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர், கையில் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து எழுந்த தள்ளுமுள்ளால் அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மக்களவையில் தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத நடத்தைக்காக பாஜக காங்கிரஸை கடுமையாக விமர்சித்தது. பாராளுமன்றத்தின் புனிதத்தன்மையையும் சிறந்த பாரம்பரியத்தையும் பராமரிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணையுமாறு பாஜக கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அவையின் மையப்பகுதியில் எம்.பி.க்கள் கோஷமிட்டபோது, அதில் பெண் எம்.பி.க்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து அவைக் காவலர்கள் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், அவையின் மையப்பகுதியில் எம்.பி.க்கள் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக் கோரினோம். அப்போது அவையின் பாதுகாவலர்கள் எங்கள் கட்சியின் பெண் எம்.பி.க்களைப் பிடித்துத் தள்ளினார்கள். நாடாளுமன்றத்துக்குள் பெண் எம்.பி.க்களிடம் இதுபோன்று நடப்பதை இதற்கு முன் நாங்கள் பார்த்தது இல்லை. இந்தச் சம்பவத்தை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். பெண் எம்.பி.க்கள் உடலில் மீது கை வைத்து காவலர்கள் தள்ளுவது இதற்கு முன் பார்த்தது இல்லை. இது எங்களுக்கு சோதனைக் காலம். நாட்டில் சர்வாதிகாரம் இருக்கிறதா அல்லது ஜனநாயக ஆட்சி இருக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, கேரள காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் அவைக்காவலர்களால் பிடித்து தள்ளப்பட்டனர் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி, “நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்த போது, அவைக்காவலர்கள் எங்களை தள்ளினர். நாங்கள் இதனால் மனமுடைந்தோம், கோபமுற்றோம், அவமானம் கொள்கிறோம். எந்த பெண்காவலர்களும் அவையில் இல்லை. எனினும், ஆண் காவலர்கள் எங்களை முரட்டுத்தனமாக தள்ளினர்.

பெண்காவலர்களே அவையில் இருப்பினும், ஜனநாயக உரிமைக்காகத்தானே நாங்கள் குரல் எழுப்பினோம். எதன் அடிப்படையில் எங்களை தள்ளினார்கள்? மக்களவை முழுமையாக சமரசத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது. எங்களை முரட்டுத்தனமாக தள்ளிய அவைக்காவலர்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” எனக் கூறினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share