ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், ”ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டரில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், டெண்டர் அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று(மே 26) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேலுமணி, மனுதாரரின் மனுவுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பருப்பு, பாமாயில் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு இன்று மதியம் அல்லது நாளை காலை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**-வினிதா**
�,