தீபாவளியை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பல பொதுத் துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் இந்தாண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2020-21ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்ச வரம்பு ரூபாய் 21 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு ரூபாய் 7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி லாபம் மற்றும் நஷ்டத்தில் இயங்கக் கூடிய அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் 8 ஆயிரத்து 400 ரூபாய் பெறுவர். மொத்தமாக தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு, 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் தீபாவளிக்கு 20 சதவிகித போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக 10 சதவிகிதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் 10சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,