ஐந்து ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி மலைப்பகுதிகளில் யானைகள் வழித்தடத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அதிகளவில் கட்டப்பட்டன. இதனால் யானைகளின் வலசை பாதை தடைப்பட்டது. இதையடுத்து, யானைகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை 2019ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து காட்டேஜ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ரிசார்ட்டுகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். இதற்கு மேல் யானை வழித்தடத்தில் புதிய ரிசார்ட்டுகள் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் இன்னசென்ட் திவ்யா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நிர்வாகரீதியாக மாற்றங்களை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை இன்று(நவம்பர் 16) விசாரித்த உச்ச நீதிமன்றம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டதின் 113வது ஆட்சியராகவும், 5வது பெண் ஆட்சியராகவும் கடந்த 2017 ஜூன் மாதம் பொறுப்பேற்றார் இன்னசென்ட் திவ்யா. இவர் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை, பிளாஸ்டிக் ஒழிப்பு, விதி மீறிக் கட்டப்படும் கட்டடங்களுக்குச் சீல் வைப்பு எனப் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மரம் நடுவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார் .
**-வினிதா**
�,