ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம்?
ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு, நாளை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசினக்குடி பகுதியில் தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, சுற்றி வந்த ரிவால்டோ யானைக்கு சமீபத்தில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து மீண்டும் வனத்தில் விட்டனர். அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்குத் திரும்பி வந்துவிட்டது.
அந்த யானையை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்குக் கொண்டுசெல்ல உத்தரவிடக் கோரி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் “10 ஆண்டுகளாக மனிதர்களுடன் பழகி வந்த ரிவால்டோ யானை காட்டுப்பகுதியில் நீண்ட தூரத்தில் விடப்பட்டும் மறுநாளே திரும்பி வந்துவிட்டது. அதை மீண்டும் வனத்திற்கு அனுப்பாமல் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும். மீண்டும் வனத்திற்கு அனுப்பினால் யானைக்கு ஆபத்து உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிலையில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதை எம்.ஆர்.பாளையம் முகாமுக்குக் கொண்டுவர இயலாது என்றார்.
இதையடுத்து, ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து, நாளை (ஆகஸ்ட் 13) விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
**-வினிதா**
�,