கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது!

public

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தது. இந்தக் கடத்தலில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரக அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இந்த நிலையில், சுங்கத் துறையிடம் இருந்து வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

கடந்த வெள்ளிக்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய புலனாய்வு முகமை, இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அமீரகத் தூதரக அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார், தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரளத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத் ஆகியோர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்தது.

முதலில் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்ட சரித் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

முதல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் சரக்குகளை வழங்குவதற்கான ராஜ தந்திர ஆவணங்களை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகத் தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , தங்கத்தின் வருமானம் இந்தியாவில் தேச விரோத நடவடிக்கைகளுக்காக நிதியளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே முன் ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெங்களூருவில் வைத்து ஸ்வப்னா சுரேஷையும், சந்தீப் நாயரையும் நேற்று என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. இவர்களது செல்போன் அழைப்புகளைக் கண்காணித்து கைது செய்ததாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து இதுவரை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முன்னிறுத்தப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *