ஆரம்ப காலத்தில் சுவை இல்லாத ரொட்டியைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுப்புதட்டியவர்களுக்கு மாவில் சுவை கூட்டக் கூடுதலாக என்ன சேர்க்கலாம் என்று யோசித்திருக்க வேண்டும். முதலில் இனிப்புக்காகத் தேன் கலந்திருக்கிறார்கள். நன்றாக இருந்திருக்கிறது. அந்த இனிப்பு ரொட்டியையே உலகின் முதல் கேக் எனலாம். பிறகு பழங்கள், உலர் பழங்கள், பருப்பு வகைகள் என்று ஒவ்வொன்றாகச் சேர்த்துச் சமைத்திருக்கிறார்கள். இப்படித்தான் கேக்கின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இன்று பிரபலமாக, பலராலும் விரும்பப்படும் முட்டை சேர்க்காத இந்த டூட்டி ஃப்ரூட்டி கேக்.
**என்ன தேவை?**
மைதா அல்லது கோதுமை மாவு – ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை – ஒரு கப்
வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்
ரிஃபைண்ட் எண்ணெய் – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் – ஒரு கப்
உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கி பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் – 2 டேபிள்ஸ்பூன் (இது ORANGE PEEL என்கிற பெயரில் கடைகளில் கிடைக்கும்)
**எப்படிச் செய்வது?**
மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா அல்லது கோதுமை மாவை இரண்டு முறை சலித்து எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் மாவுடன் உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றை கலந்து தனியாக வைக்கவும். தயிரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து நன்றாக அடிக்கவும். அதை அப்படியே ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அது நன்றாக நுரைத்து இருக்கும். பின்னர் அதனுடன் அரை கப் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதனுடன் சலித்துவைத்த மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து தனியாகக் கலந்து வைத்த உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கேக் கலவையை எண்ணெய் தடவிய பேக்கிங் பானில் ஊற்றவும்.
பேக்கிங் பானை ஓவனில் வைத்து 45 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பின்னர் எடுக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: பனானா வால்நட் கேக்](https://www.minnambalam.com/public/2021/12/13/1/banana-walnut-cake)**
.�,