திருப்பதி: பிரம்மோற்சவ விழா உண்டியல் வசூல் ரூ.18.23 கோடி!

Published On:

| By Balaji

திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.18.23 கோடி வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ விழா நடந்தது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா நிறைவு நாளன்று காலை கோயில் வளாகத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

நிறைவு நாளன்று அதிகபட்சமாக 30,442 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10,867 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 2.04 கோடி உண்டியலில் வசூலானது.

பிரம்மோற்சவ விழா நடந்த ஒன்பது நாட்களில் 2 லட்சத்து 21,129 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 98,977 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.18.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட்களும், 8,000 இலவச தரிசன டிக்கெட்களும் கடந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அக்டோபர் மாதத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

நேரடியாக எந்தவிதமான தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படவில்லை. தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share