திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நாளை (பிப்ரவரி 7) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். கோயிலில் இந்த ஆண்டு மாசித் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது.
விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ் நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேர் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா வருகிற 7ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவிழாவுக்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோயில் பகுதி, திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் நேரில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
ஏற்கனவே கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தோம். பின்னர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலுதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற உள்ள மாசித் திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க 24 மணி நேரமும் முதலுதவி மையம் செயல்படும். திருவிழா நடைபெறும் 12 நாட்களும் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். பக்தர்களுக்கு நல்ல குடிநீர் வழங்குவதற்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்படும். மேலும் தற்காலிக கழிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை மூலம் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும். தீயணைப்புத் துறையினர், மீன்வளத் துறையினர் கடலில் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு மாசித் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம், சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடைபெறும். எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். கோயிலுக்கு பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.