புலிகள் கணக்கெடுப்பு: கின்னஸ் சாதனை படைத்த இந்தியா!

Published On:

| By Balaji

புலிகளின் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு உலகின் முதல் சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், “பிரதமரின் தலைமையில், ‘சங்கல்ப் சே சித்தி’ மூலம் இலக்குக்கு நான்காண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தீர்மானத்தை இந்தியா நிறைவேற்றியது.

தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த 2018ஆம் ஆண்டு புலிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வனவிலங்குகளி்ன் நடமாட்டம் குறித்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில் 2,967 என்ற எண்ணிக்கையில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இது உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும்.

141 இடங்களில் 26,838 கேமராக்கள் கணக்கெடுப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. மொத்தமாக 3.48 கோடி போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 76,651 புலிகள் போட்டோவும்,51,777 சிறுத்தைகள் போட்டோவும் பதிவாகி உள்ளன. இவை தவிர மற்ற வன விலங்குகளின் போட்டோக்களும் பதிவாகி உள்ளன.

Under the leadership of PM @narendramodi, India fulfilled its resolve to double tiger numbers 4 years before the target through #SankalpSeSiddhi. @GWR @PMOIndia pic.twitter.com/ChnPkCEzUG

— Prakash Javadekar (@PrakashJavdekar) July 11, 2020

இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தேசிய புலிகள் காப்பக அமைப்பும் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 2006ஆம் ஆண்டில் 1,411 என்ற அளவில் மட்டுமே புலிகள் இருந்தது.2014ஆம் ஆண்டில் 2,226 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வயதுக்கு வந்த புலிகளின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. குட்டி புலிகளின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் புலிகள் வாழ்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பது இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது. உலகின் முதல் சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது” என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டுள்ளார்.

**ராஜ்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share