மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவரான அசோகன் தனது 2ஆவது மனைவி ஹேமாவுடன் பட்டினப்பாக்கத்தில் வசித்துவந்தார். 2015ஆம் ஆண்டு மழை-வெள்ளம் பாதிக்கப்பட்ட சமயத்தில் டிசம்பர் 6ஆம் தேதி ஹேமா, கணவரின் உதவியாளர் சதிஷை அழைத்துக் கொண்டு கோட்டூர்புரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றார்.
ஹேமா வீட்டிற்கு வர தாமதமானதால் அசோகன், ஹேமாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஹேமா, அவரது தாயாரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கைத்துப்பாக்கியால் இரண்டுமுறை சுட்டு மிரட்டியிருக்கிறார். இதுகுறித்து ஹேமா பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறை அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்தது. இவ்வழக்கில் இன்று (நவம்பர் 22) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சாந்தி, அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக உத்தரவிட்டார். மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அசோகனின் கோரிக்கையை ஏற்று தண்டனைக் காலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
1996,2001 காலகட்டத்தில் திமுக சார்பில் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் அசோகன். 2006 தேர்தலில் சீட் வழங்கவில்லை என்று கூறி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு தலைமைக் கழகப் பேச்சாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், ஒரு வருடத்திற்குப் பிறகு அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தில் அதிமுகவிலிருந்து விலகிய அசோகன் திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
�,