திருநெல்வேலி அருகே உள்ள ரெட்டியார்பட்டி என்ற பகுதியில் நான்கு வழிச்சாலைகளில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறத்தில் வந்த இருசக்கர வாகனத்தின் மீதி மோதியதில் இரண்டு மாணவிகள் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேசமயத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் தன்னுடைய நண்பர்கள் மூவருடன் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புறம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகளான தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த திவ்ய காய்த்ரி, மதுரை பரசுராமன்பட்டியைச் சேர்ந்த பிரீடா ஏஞ்சலின் ராணி ஆகியோரும், காரில் வந்த சண்முகசுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு மாணவி திவ்ய பாலா மற்றும் காரில் வந்த மூவரும் படுகாயமடைந்தனர்.
அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்த நான்கு பேரும் கொண்டு செல்லப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் டி.பி.சுரேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பயிற்சி மாணவிகள் ரெட்டியார்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பணி நிமித்தமாக சென்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**வினிதா**
�,