நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) ரூ.10,513 கோடி வருவாய் பயணிகள் கட்டணம் மூலம்
கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக முடங்கிய ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் 96 சதவிகித ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவை பெரும்பாலும் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரயில் பயணிகள் கட்டணம் மூலமான வருவாய் குறித்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரயில்வேக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), முதல் காலாண்டைவிட 113 சதவிகிதம் அதிகமான வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் ரூ.4,921 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இரண்டாவது காலாண்டில் ரூ.10,513 கோடி வருவாய் பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வரும்நிலையில் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டால் ரயில்வே துறையின் வருவாய் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-ராஜ்**
.
�,