காட்டில் விடப்பட்ட குட்டி யானை: நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

காட்டில் தனித்து விடப்பட்ட மூன்று மாதக் குட்டி யானைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் மூன்று மாதக் குட்டி யானை தனது தாயைப் பிரிந்து சுற்றி வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் அதைப் பிடித்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டுள்ளனர். ஆனால், மீண்டும் அந்தக் குட்டி யானை ஊர் பகுதிக்குள் நுழைந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அதை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். யானை குட்டி பலவீனமாக இருந்தது தெரியவந்தது. அதற்கு அம்முகுட்டி என்று பெயர் சூட்டிய வனத் துறையினர், பால் ஊட்டி வளர்த்து வந்தனர். அம்முகுட்டி அங்கிருக்கும் வரை ஏராளமான மக்கள் வந்து பார்த்துச் செல்வார்கள்.

ஒரு வாரம் யானையைப் பராமரித்த வனத் துறையினர் அதைக் காட்டுக்குள் இருக்கும் மற்ற யானைகளுடன் சேர்ப்பதற்காக மீண்டும் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். இதற்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்முகுட்டியைக் காட்டுப்பகுதியில் விட தடை கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ”மூன்று மாதக் குட்டியால் தானாக உணவு எடுத்துக்கொள்ள முடியாது. காட்டுக்குள் விட்டதால் யானைக் கூட்டங்கள் அதைச் சேர்த்துக்கொள்ளும் என்பது நிச்சயமில்லை. காட்டு நாய், புலி ஆகியவை குட்டியைத் தாக்கவும் வாய்ப்புள்ளது. எனவே குட்டி யானையை மீட்டு யானைகள் முகாமில் பராமரிக்கக் கோரி வனத் துறைக்குக் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த மனு நேற்று (அக்டோபர் 14) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத் துறை சார்பில், ‘காட்டில் விடப்பட்ட குட்டியைக் கண்காணித்து வருவதாகவும். அதை யானைக் கூட்டங்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் வனத் துறையே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்’ எனவும் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், “யானையைக் கண்காணிக்க அரசிடம் என்ன தொழில்நுட்ப வசதி உள்ளது? மூன்று மாதக் குட்டிக்கு எப்படிப் பால் கிடைக்கும்? அதற்குப் பிற விலங்குகளால் ஆபத்து ஏற்படாதா? அப்படி அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்குத் தமிழக வனத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel