பேருந்தை வழிமறித்து அரிவாளால் தாக்கிய மூவர் கைது!

Published On:

| By Balaji

கடலூரில் தனியார் பேருந்தை வழிமறித்து அரிவாளால் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநருக்கு வெட்டுக்காயத்தை ஏற்படுத்திய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமீபநாட்களாக நடக்கும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்எஸ்ஐ படுகொலை, மதுரையில் இன்னோவா காருக்கு வழிவிடாததால், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியது, தர்மபுரியில் ஆடு திருடியவர்களைக் காட்டி கொடுத்த பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று கடலூரில் இருந்து புதுவை நோக்கி ஸ்ரீலட்சுமி என்ற தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரியகாட்டுப்பாளையம் எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பேருந்தை வழிமறித்து அரிவாளால் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். நடத்துநர் தேசிங்கை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கொடுவா கத்தியால் அவரின் வலது முழங்கையில் வெட்டி காயத்தை ஏற்படுத்தினர்.

இதனை தடுக்க வந்த நடத்துநர் நவீன்குமாரை நெட்டி தள்ளி அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கையில் வைத்திருந்த பணப்பையில் இருந்த ரூ.1200யை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தியின் மகன் பிரித்விராஜன், கதிர்வேல் மகன் சீனுவாசன், புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த வேம்பன் மகன் மருதுநாயகம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கொடுவா கத்தி, மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றதால் கூட்டாளிகளுடன் வந்து கண்ணாடியை உடைத்ததாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்,” பேருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பெரியகாட்டுப்பாளையம் அருகில் அனுகிரகா அப்பார்ட்மென்ட் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பேருந்தை மறித்தனர். அப்போது ஓட்டுநர் ஏம்பா இப்படி பண்றீங்க என்று கேட்டார். கேள்வி கேட்ட உடனே அவர்கள் ஓட்டுநரை அசிங்கமாக திட்டி கையால் தாக்கினார்கள். அதற்குள் ஒருவன் ஓடிப்போய் இளநீர் கடைக்காரர் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி வந்து ஓட்டுநர் கையை வெட்டிட்டு நடத்துனரை மிரட்டி பணத்தை பிடுங்கி சென்றனர்” என்று கூறினார்.

இனிமேல் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் எச்சரித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share