ஆப்பிள் வணிகம் தொடர்பாக ஜம்மு – காஷ்மீருக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திங்களன்று(அக்டோபர் 14)தெற்கு காஷ்மீரில் ஷிர்மால் கிராமத்தில், வெளிமாநில ஓட்டுநர் ஒருவரை, தீவிரவாதிகள் கொன்றுவிட்டு, அவருடைய லாரிக்கு தீ வைத்துக் கொளுத்தினர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். தனது லாரியில் ஆப்பிள் ஏற்றுவதற்குச் சென்றிருந்த போது ஷரீப் கான் என்ற இந்த வியாபாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதி என கருதப்படும் ஒருவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை (அக்டோபர் 16) புல்வாமா, ஷோபியான் மாவட்டங்களில் நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த தொழிலாளி ஒருவரும், பஞ்சாபில் இருந்து வந்திருந்த ஆப்பிள் வியாபாரி ஒருவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் காஷ்மீரி அல்லாத வர்த்தகர்கள் மற்றும் ஷோபியனில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், ஆப்பிள் வியாபாரிகளும், லாரி ஓட்டுநர்களும் சரக்கை ஏற்றாமலேயே காஷ்மீரிலிருந்து வெளியேறிய நிலையில், ஆப்பிள் வணிகம் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் ஆப்பிள் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடையடுத்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நேற்று(அக்டோபர் 17) முதல் காஷ்மீரின் பல்வேறு இடங்களிலுள்ள உள்ளூர் அல்லாத ஆப்பிள் வர்த்தகர்கள் மற்றும் டிரக் டிரைவர்களை ஷோபியன் மற்றும் புல்வாமாவில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியது.
பள்ளத்தாக்குக்கு வெளியில் இருந்து சுமார் 500 லாரிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேருந்து நிலையத்திற்கும், பழ மண்டிக்கும் மற்றும் ஷோபியனில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் மேற்கோளிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் டி.ஜி.பி தில்பாக் சிங் கூறும் போது, “வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் நேரடியாக பழத்தோட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள்களை ஏற்றுவதற்காக பாதுகாப்பு அதிகமுள்ள முக்கிய சாலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தோட்டங்களிலிருந்து சிறிய ரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் ஆப்பிள்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்து லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. இந்த இடங்களில் எல்லாம் ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.
காஷ்மீர் இமேஜஸ் என்ற தினசரி பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான பஷீர் மன்ஸர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், “இதுபோன்ற சம்பவங்கள் அல்லது கொலைகள் எப்போது நடைபெற்றாலும், அச்சம் ஏற்படுவது இயல்பானது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அதே சமயத்தில், காஷ்மீர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் தோட்டக்கலைத் துறையில், சோப்போர் முதல் ஷோபியான் வரை கடந்த ஒரு மாத காலத்தில் நடந்துள்ள தாக்குதல்கள்; தனது லாரியில் பழங்களை ஏற்றிக் கொண்டிருந்த ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு; தோட்டக்கலைத் துறைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றே நான் கருதுகிறேன்”என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்தே வாழ்கின்றனர். பழங்கள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது அறுவடைக் காலம். இந்தப் பருவத்தில் ஆப்பிள் பழங்களைப் பறித்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவார்கள். மக்களிடம் இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டால், அவர்களால் தங்கள் ஆப்பிள்களை விற்க முடியாது. அது காஷ்மீரின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும். கொல்லப்பட்டது யாராக இருந்தாலும், காஷ்மீரியோ அல்லது காஷ்மீரி அல்லாதவராக இருந்தாலும், ஒட்டுமொத்த சூழ்நிலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.
�,”