திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Balaji

கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதோடு விதிமுறைகளை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிபகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்குச் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 27ம் தேதி மாலை 5.22 மணிக்குச் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சனிபகவான் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் திருநள்ளாறு சனி பகவான் கோயில் தனி அதிகாரியுமான அர்ஜுனன் சர்மா தெரிவித்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி நாள் மட்டுமல்லாது அன்றைய தினத்திலிருந்து ஒரு மண்டலத்திற்கு அதாவது 48 நாட்கள் இக்கோயிலில் சனிபகவானைத் தரிசனம் செய்யலாம். எனவே பக்தர்களின் வருகையையொட்டி, கோயிலில் அடிப்படை வசதிகளைச் சீரமைக்கும் பணிகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோயிலுக்குள் மட்டும் பக்தர்கள் அனுமதிப்பது என்றும் அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராட அனுமதி இல்லை என்றும் முடிவெடுத்து புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த சூழலில் சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிட கோரி கோயிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ் நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பக்தர்களை அனுமதிக்கும் முடிவைக் கைவிடக் கோரி புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு நவம்பர் 27ஆம் தேதி மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அரசின் இந்த முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சனிப்பெயர்ச்சியின் போது கோயிலில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் பக்தர்களின் வசதிக்காக மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி அரசு சார்பில், பக்தர்களைக் கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் கோயிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த 48 நாட்களில் தரிசனத்திற்காக 60,000 மின்னணு அனுமதிச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும் தரிசனத்திற்கு நாளொன்றுக்கு எத்தனை பேரை அனுமதிப்பார்கள் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் வைரஸ் தொற்று தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதுதவிர சனிப்பெயர்ச்சி விழாவை நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், துணைநிலை ஆளுநர், மனுதாரர் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை இன்று கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி இவ்வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel