சாஸ்திரங்கள் அடிப்படையிலான தீர்ப்பு: திருமாவளவன்

Published On:

| By Balaji

அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், சன்னி வக்பு வாரியத்துக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 8) தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இசுலாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், ராமர் கோவிலை கட்டுவதற்கு மைய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதியை கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், “இசுலாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்களை ஒப்படைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. சாஸ்திரங்களின் அடிப்படையிலாக இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கியிருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share