தெற்கு திட்டை சர்ச்சை: துணைத் தலைவர் அதிமுகவா, திமுகவா? என்ன நடக்கிறது!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, புவனகிரி ஒன்றியத்தில் உள்ளது தெற்கு திட்டை ஊராட்சி. இங்குள்ள 100 குடும்பத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற குடும்பத்தினர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 1,484 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 270 பேர் பட்டியலின வாக்காளர்கள். மொத்தம் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரியை, ஊராட்சித் துணைத் தலைவர் மோகன்ராஜ் சாதிய பாகுபாடுடன் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்து விசாரணை நடந்து வருகிறது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியைத் துணைத் தலைவர், ஊராட்சி கூட்டத்தின் போது தரையில் அமரவைத்ததாகக் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானது.

இதையடுத்து அக்டோபர் 10ஆம் தேதி, இதுதொடர்பாக புவனகிரி காவல்நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அன்றைய தினமே, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் விசாரணைக்காக தெற்கு திட்டை சென்றனர். அப்போது ராஜேஸ்வரி காவல் நிலையத்திலிருந்த நிலையில், அவரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு தலைமறைவாக உள்ள மோகன்ராஜைத் தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு திட்டைச் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இழிச்செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இனி எந்த ஊராட்சியிலும் இதுபோன்ற அவமரியாதை நடக்கக்கூடாது. அதிமுக அரசு அதனை அணுவளவும் அனுமதிக்கவும் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

**துணைத்தலைவர் திமுகவைச் சேர்ந்தவரா?**

ஸ்டாலின் அறிக்கையை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், “ராஜேஸ்வரியைத் தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்குப் பெருமுயற்சி எடுத்திருக்கிறார். ஏனென்றால் ராஜேஸ்வரியைத் தரையில் அமரவைத்த மேகன்ராஜ் திமுகவைச் சேர்ந்தவர் என்பது தான் உண்மை. ஏற்கெனவே ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று தயாநிதி மாறன் பட்டியலினத்து மக்களை இழிவு செய்தபோது, அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை இழி வசனம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைக் கண்டிக்கவில்லை.

விளம்பரத்திற்காக அவ்வப்பொழுது பொய் வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கும் திமுகவின் முக்கிய நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகளைத் தரக்குறைவாகப் பேசியதைக் கண்டிக்காமலும் கடந்துபோன திமுக தலைவர் சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமைச் செயலுக்கு யார் காரணம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலே அதிமுக ஆட்சி மீது பழிபோட முயன்றிருப்பது அவரது அறியாமையையும், அரசியல் அரிப்பையுமே காட்டுகிறது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக புவனகிரி திமுக எம்.எல்.ஏ, துரை கி. சரவணன், “மோகன்ராஜ் திமுக இல்லை என்று மறுப்புத் தெரிவித்ததுடன், இவ்விவகாரம் தொடர்பாகக் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பார்” என்று தெரிவித்தார்.

**ஆதாரத்தை வெளியிட்ட திமுக**

அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “ மோகன்ராஜ் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் நீலாவதி ஆகிய இருவரும் அதிமுக உறுப்பினர்களாக உள்ளனர். எனவே திமுக மீது சாதி சாயம் பூசும் வகையில் அமைச்சர் கூறியிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றேன். உதாரணமாக, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கிறார். அவர் செய்த தவறை அதிமுக செய்த தவறு என்று சொல்ல முடியுமா? தனிநபர் செய்த தவறை கட்சியே செய்தது போல உருவகப்படுத்துவது முட்டாள்தனமானது” என்று குறிப்பிட்டார். அதோடு மேற்குறிப்பிட்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான, உறுப்பினர் அட்டையையும் ஆதாரமாக வெளியிட்டார்.

இந்நிலையில், தெற்கு திட்டை விவகாரம் தொடர்பாக விசாரித்ததில், “இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகமே இல்லை. கிராம நூலகத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ராஜேஸ்வரி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவரது கணவர் சரவணகுமார் தான் பஞ்சாயத்து தொடர்பான அனைத்தையும் கவனித்து வருகிறார். ராஜேஸ்வரி இன்சார்ஜாக மட்டும் இருந்து வருகிறார். (தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இதுபோன்று தான் நடக்கிறது).

உள்ளாட்சித் தேர்தலில் ராஜேஸ்வரியை எதிர்த்துப் போட்டியிட்டவர் தெய்வானை. இவரது உறவினர் சங்கர். சங்கர் அந்த ஊராட்சியின் நீர் தேக்கத் தொட்டி இயக்குபவராக இருந்து வந்தார். இந்த டேங்க் சுத்தமில்லாமல் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நீர்த் தேக்கத் தொட்டியைப் பூட்டி அதன் சாவியை சங்கரிடம் இருந்து ராஜேஸ்வரி, சரவணகுமார் வாங்கிவிட்டனர். ஆனால் ஊராட்சித் துணைத் தலைவரான மோகன்ராஜ், அந்த பூட்டை உடைத்துவிட்டு, புது பூட்டை வாங்கி பூட்டிவிட்டு, அதன் சாவியை சங்கரிடமே கொடுத்துப் பொறுப்பை மீண்டும் ஒப்படைத்திருக்கிறார். இது தான், ராஜேஸ்வரி தரப்புக்கும், மோகன்ராஜ் தரப்புக்கும் பிரச்சினையாக இருந்தது. அதோடு, பஞ்சாயத்துச் செலவினங்கள் தொடர்பான பில் மற்றும் கமிஷன் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது” என்று தெற்கு திட்டை ஊராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவின் கணவர் கார்த்திகேயனிடம் விசாரித்ததில் அவர், “ஊராட்சிமன்ற கூட்டங்கள் கிராம நூலகத்தில் தான் நடக்கும். அங்கு ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சரவணகுமாரும் வருவார்கள். இடம் இல்லாத காரணத்தால் சிந்துஜாவும், ராஜேஸ்வரியும் தரையில் தான் அமருவார்கள். இந்த புகைப்படம் எடுத்த நாளன்று கூட சிந்துஜா ராஜேஸ்வரி அருகில் தான் அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்து சென்றதும்தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

ராஜேஸ்வரியின் கணவர் சரவணகுமாரிடம் விசாரித்ததில், நீர்த் தேக்கத் தொட்டி விவகாரத்தில் மோகன்ராஜுக்கும், தங்களுக்கும் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்த அவர், மேலும் எதுவும் கருத்து கூறவில்லை.

**ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்**

இதனிடையே ராஜேஸ்வரிக்கும், மோகன்ராஜுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவிக்காததால் சிந்துஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். ஆனால், பூதவராயன்பேட்டை பேட்டை ஊராட்சியில் நிரந்தர ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த சிந்துஜா, தெற்கு திட்டை ஊராட்சியில் தற்காலிகமாகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்ததாகவும், மேற்குறிப்பிட்ட இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில், இன்று கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள மோகன்ராஜ், இன்று வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. முன்னதாக, மோகன்ராஜ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share