rநிறவெறிக்கு மருந்து கிடையாது : கமலா ஹாரிஸ்

Published On:

| By Balaji

அமெரிக்காவின்  துணை அதிபர்  பதவிக்குப் போட்டியிடும், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியான கமலா ஹாரிஸ் அமெரிக்காவிற்காக உயிர்த் தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்துள்ளார். நிறவெறிக்கு மருந்து கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து, கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று பேசிய கமலா ஹாரிஸ், நிறவெறிக்கு மருந்து கிடையாது.  நிறவெறியை ஒழிக்க நாம்தான் பாடுபட வேண்டும்.  ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் என எத்தனையோ பெயரைக் குறிப்பிட வேண்டியுள்ளது.   நம் குழந்தைகளுக்காகவும், நம் அனைவருக்காகவும் சட்டத்தின் கீழ் சம நீதி என்ற அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வேலையைச்  செய்ய வேண்டியுள்ளது.  அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்காத வரை நாமும் சுதந்திரமானவர்களாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மேரி சர்ச் டெரெல், மேரி மெக்லியோட் பெத்துன், ஃபென்னி லூ ஹேமர், டயான் நாஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷெர்லி சிஷோல்ம் போன்ற  பெண்  உரிமைக்காகப் போராடியவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கதைகளை நாம் கற்பிக்கவில்லை. ஆனால் அமெரிக்கர்களாகிய நாம் அனைவரும் அவர்களின் தோள்களில் நிற்கிறோம் என்று குறிப்பிட்டார்.  

எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் இவர்கள் குரல் கொடுத்தனர்.   இந்த பெண்களும், அடுத்து வந்த தலைமுறையினரையும், நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஜனநாயகத்தையும் வாய்ப்பையும் உண்மையானதாக மாற்ற உழைத்தனர்.  பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனின் தலைமைத்துவத்திற்கு அவர்கள் வழி வகுத்தனர் என்றார்.

இந்த உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ், “மற்றவர்களுக்குச் சேவை செய்வதுதான்,  வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் தரும் என்று தனது அம்மா எப்போதும் சொல்வார்” என்றும் குறிப்பிட்டார்.

**-கவிபிரியா** �,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share