சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சவுதி அரேபியா, ஜப்பான் என உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பாதிப்பு இந்தியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வந்த கேரளா மாணவர்களைக் குணப்படுத்தி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் தெலங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது மருத்துவ சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா கண்டறியப்பட்டதால் மக்களிடையே நோய் பரவல் குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளப் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை குறித்து இன்று (மார்ச் 3) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான எளிய வழிமுறைகளாக, 1) கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவு வேண்டும் 2) கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளைக் கழுவாத கைகளால் தொடாமல் இருக்க வேண்டும், 3)கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட விழிப்புணர்வு குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பகிர்வில், கொரோனா வைரஸ் பரவல் குறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பல அமைச்சர்களும், பல மாநிலங்களும் இணைந்து பணியாற்றுவதாகவும், விமான நிலையங்களில் பயணிகள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
There is no need to panic. We need to work together, take small yet important measures to ensure self-protection. pic.twitter.com/sRRPQlMdtr
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
**கொரோனாவை விரட்ட வணக்கம் சொல்லுங்கள்**
பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெரோம் சாலமோன், ”கொரோனா தொற்று குறித்துக் கூறுகையில், ஒருவரை ஒருவர் தொடும்போது, நோய் உள்ளவர்களிடமிருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், ஒருவரை சந்திக்கும்போது, மரியாதைக்காக கைகளைக் குலுக்கிக் கொள்வதைக்கூடத் தவிர்ப்பது நன்று” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ”இந்தியப் பாரம்பரிய நடைமுறையான கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நோய் பரவலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.
**பவித்ரா குமரேசன்**�,”