மகாராஷ்டிராவில் யாரும் துஷ்யந்த் இல்லை: சிவசேனா

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், “இம்மாநிலத்தில் யாரும் துஷ்யந்த் இல்லை. சிவசேனா தர்மத்தையும் சத்தியத்தையும் அரசியலில் பின்பற்றி வருகின்றது” எனக் கூறினார்.

288 சட்டப் பேரவைத் தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரத்தில் 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 தொகுதிகளையும், 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனை 56 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 145 இடங்களை பாஜக கைப்பற்றாததால், சிவசேனையின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியமைக்க சிவசேனா வைக்கும் முக்கியமான நிபந்தனை, ஆதித்யா தாக்கரேவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் ஆக்க வேண்டும், மீதமுள்ள காலத்தில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கும் உள் துறை பொறுப்பு சிவசேனாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான். பாஜக தேவேந்திர பட்னவிஸ் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான முதல்வர் என முடிவெடுத்திருக்கும் நிலையில், தற்போது அதன் முடிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று(அக்டோபர் 29) செய்தியாளர்களைச் சந்தித்த போது, “இங்கே தந்தையை சிறையில் வைத்துள்ள துஷ்யந்த் யாரும் இல்லை. இங்கே, சிவசேனா தர்மத்தையும் சத்தியத்தையும் அரசியலில் பின்பற்றி வருகின்றது. மகாராஷ்டிராவில் இருப்பது மிகவும் சிக்கலான அரசியல் ஆகும். அதிகாரத்தில் நம்மை யாராவது விலக்கி வைக்க நினைத்தால் அது நமக்கு பெருமை தான். விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். எது மக்களை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கின்றது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டு தான் வருகின்றோம். தேர்தலுக்கு முன் என்ன முடிவு எடுக்கப்பட்டதோ, அதே முடிவில் தான் தற்போது நாங்கள் இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே அவர்கள், நம்மிடம் பல்வேறு வழிகள் இருந்தாலும் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு பாவம் செய்ய விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். சிவசேனா எப்போதும் சத்தியத்தின் அரசியலை தான் செய்து கொண்டிருக்கிறது; பதவிக்காகவோ அதிகாரப் பசியிலோ என்றும் இருந்ததில்லை. ஜனநாயகத்தை கொன்று விட்டு, எல்லோருக்கும் அறம் சார்ந்த வகுப்புகளை எடுக்கவில்லை. சிவசேனா எப்போதும் இது மாதிரியான அரசியலில் இருந்து விலகியே இருக்கின்றது” எனக் கூறினார்.

[ஹரியானா: துஷ்யந்த் நிபந்தனையை ஏற்ற பாஜக!](https://minnambalam.com/k/2019/10/27/106/Haryana-ml-kattar-Dushyant-Chautala-takes-oath)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share