பிரபல நகைக்கடையில் பல கோடி கொள்ளை!

Published On:

| By Balaji

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நகைகள் வாங்குவது மட்டும் பொதுமக்கள் மத்தியில் குறைவதில்லை. பலவகை டிசைன்களுடன் பிரபலமான பல நகைக் கடைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றது. இதில் லலிதா ஜூவல்லரி தனக்கென்று தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.

பிரபலமான சென்னை லலிதா ஜூவல்லரியின் கிளை நிறுவனம் திருப்பதி, கும்பகோணம், ராமநாதபுரம், மதுரை, திருச்சி என பல இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இன்று (அக்டோபர் 2) அதிகாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறந்த ஊழியர்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் பின்பக்க சுவரில் துளையிட்டு கீழ்த்தளத்திலும், முதல்தளத்திலும் இருந்த தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அருகில் இருக்கும் கடைகளில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு மேற்கொள்வது உட்பட அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு என்பது குறித்துக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை இருக்கலாம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடையில் இரவு நேரத்தில் 6 பேர் காவலுக்கு இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரு கொள்ளையர்கள் குழந்தைகள் அணியும் முகமூடி அணிந்து கடைக்குள் வந்ததும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை, அதாவது 2.11 மணி முதல் 3.10 வரை கடைக்குள் இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் கூறுகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடயவியல் துறை இணை இயக்குநர் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதேபோன்று கொள்ளை சம்பவம் நடந்தேறியது. எனவே அதே கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் தேசிய வங்கி கொள்ளையில் இதுவரை கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதேபோன்று கொள்ளை சம்பவம் தற்போது திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நடந்தேறியிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share