அம்புலி மாமாவோ, முத்து காமிக்ஸோ, நாளிதழ் கதைகளோ அல்லது காவியங்களின் கொடுமுடியான கம்ப ராமாயணமோ… அவைகளில் தோன்றும் கதாபாத்திரங்களை எல்லாம் ஏதோ கதையில் வரும் ‘ஜடங்கள்’ என்று எளிதாக எடுத்துக் கொண்டுவிட முடியவில்லை.
கனவிலும் நினைவிலும் நின்று ஊடாடும் வல்லமை படைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஓர் ‘ஆன்மா’ உள்ளதாகவே எண்ணுகிறேன்.
எப்படி மனித ஆன்மா திருப்தியடையவில்லை என்றால் இங்கேயே சுற்றிச்சுற்றி வரும் என்று சிலர் நம்புகிறார்களோ… அப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யப்படவில்லையென்றால் அதுவும்கூட நிம்மதியில்லாமல் சுற்றிச்சுற்றி வரும் என்றும் நம்புகிறேன். அவ்வாறாக, என் மனதில் சுற்றிவரும் ஒரு காவியக் கதாபாத்திரம்தான் சூர்ப்பணகை.
எனது எளிய அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டியவரை, சூர்ப்பணகையைப் போன்றொரு, காவியச் சூழலில் சிக்கிக் கொண்டதொரு பரிதாபமான பாத்திரத்தைக் காண முடியாது என்பது உறுதி.
ஆம், ராமாயணக் கதைக்கு அச்சுவிசையாக இருந்தவர்கள் இரண்டு பெண்கள். ஒருவர் சீதை. மற்றொருவர் சூர்ப்பணகை. இருவரில், சீதைக்குரிய ‘தெய்வாம்சம்’ இல்லையே தவிர, ‘காவியப் பாத்திரத்தின் கனம்’ என்று வைத்துப்பார்த்தால் சூர்ப்பணகையின் பாத்திரமே வல்லமையுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதற்குண்டான மகிமை, இன்னும் அதற்குச் சேர்க்கப்படவில்லை என்று எண்ணும் போதுதான் மனம் சலிக்கிறது.
ஆழ்ந்து பார்ப்போம்.
சீதையோ கதாநாயகி. ராமனின் மனைவி. வல்லமையுள்ள ஜனகனின் மகள். அயோத்தியின் அணிகலன். ஆகவே, அவளது கதாபாத்திரத்துக்கு ஒரு குறையும் வராது, வர முடியாது, வரவில்லை.
ஆனால், சூர்ப்பணகை…?
கவனியுங்கள். இந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு ஆகப் பெரிய பலம், குறிப்பாக மனோபலம் (Moral Support) என்பது அவளது தந்தையால் கிடைப்பது. தந்தை இல்லாத நிலையில், மூத்த சகோதரன் அந்த ஸ்தானத்தில் வந்து விடுகிறான். எனவே, தன் மூத்த சகோதரனால் தனக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் மனதார விரும்பி எதிர்பார்ப்பாள்.
அப்படிக் காவலாக இருக்கவேண்டிய அந்த மூத்த சகோதரனே, தன் வாழ்க்கையின் வேலியை நாலாபுறமும் பிய்த்துப் போட்டு வெறித் தனமாகக் கொக்கரித்து நிற்கும்போது, ஒரு பெண் என்ன ஆவாள்? சுக்குநூறாக சிதறித்தானே போவாள். அப்படி சிதறிப்போய், பிறகு சுதாரித்து, வினையாற்றி, பழிதீர்த்து, வென்றதொரு உயர்ந்த கதாபாத்திரம்தான் சூர்ப்பணகை!
வால்மீகியைப் பொறுத்தவரைக்கும், சூர்ப்பணகை பாத்திரத்தை ஆரம்பத்திலேயே கோர முகம்கொண்ட அரக்கி, கிழவி, கெட்டவள் என்றெல்லாம் அடித்து துவைத்து விடுகிறார். ஆகவே, மேற்கொண்டு அவரை நாடாமல், நம் கம்பனிடம் வருவோம்.
ஒரு காவியம் என்றால் அதற்கொரு அழகு வேண்டும், நேர்த்தி வேண்டும், நிரவல் வேண்டும் என்பதையெல்லாம் கடந்து… ஒரு காவியத்துக்கு அழகே அது சொல்லும் ‘நியாயம்’தான். அதிலும் கம்பனைப் போன்றதோர் கவிச்சக்கரவர்த்தி ஒரு காவியத்தைக் கையாளும்போது அந்த நியாயம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். சூர்ப்பணகைக்கு அந்த நியாயம் செய்யப்பட்டதா என்பதே கேள்வி.
சூர்ப்பணகையை வால்மீகி அளவுக்கு இறக்கிவிடாமல் மிக உயர்வாகவே சொல்கிறார் கம்பர். ஆனால், சீதையின் பாத்திரத்துக்கு செய்யப்பட்ட நியாயம் வேறு; சூர்ப்பணகை பாத்திரத்துக்கு செய்யப்பட்ட நியாயம் வேறு என்னும்போதுதான் மனம் கனத்துப் போகிறது.
முதலில் மிக முக்கியமானதொரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் தெளிவே மற்றதையெல்லாம் துலங்கச் செய்துவிடும்.
சூர்ப்பணகை ராமனை அணுகியது எதற்காக? காமத்துக்காக என்றுதான் காலா காலமாக நமக்குச் சொல்லி வந்திருக்கிறார்கள். அது தவறு என்கிறது எனது ஆய்வு.
காமப்பேய் பிடித்தவள் சூர்ப்பணகை என்று அள்ளி இறைப்பது ஓர் உயர்ந்த பாத்திரத்துக்கு செய்யப்படும் அநீதி ஆகும். அதனால்தான் அந்தப் பாத்திரத்தின் மேல் எல்லோருக்கும் கசப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். அந்தக் கசப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால் உண்மை துலங்கும்.
ஆம், ‘காமத் தோற்றம்’ என்பது சூர்ப்பணகையால் வலிந்து போடப்பட்ட ஒரு நாடகம் மட்டுமே. ‘காமத்தைக் கடந்த கொள்கை ஒன்று’ அவளிடம் மின்னிக் கொண்டிருந்தது. ராமனை அவள் பொருந்தாக் காமத்தோடு அணுகவேயில்லை என்பதை என்னால் உறுதியாக நிறுவ முடியும்.
உண்மைக் காரணம் என்ன? ராவணனைக் கொன்று பழி தீர்க்க வேண்டும் என்பதே. ஏன்… சொந்த அண்ணனை ஏன் கொல்ல வேண்டும்?
முன்பொருநாள், தன் ‘ப்ரதேச வல்லாண்மையை’ நிலை நிறுத்தும் பொருட்டு, மைத்துனன் என்றும் சிந்திக்காமல், சூர்ப்பணகையின் அப்பாவிக் கணவன் துட்டபுத்தி எனப்படும் வித்யுஜ்வாவை காரணமேயில்லாமல் போருக்கு அழைத்து, கொடூரமாகக் கொன்றவன் ராவணன்.
சூர்ப்பணகை இன்று மூளியாக நிற்பதற்கு அவனே மூலக்காரணம். எனவே, ராவணனை பழி தீர்க்கக் காத்திருந்த சூர்ப்பணகை சமயம் பார்த்துப் போட்ட திட்டவரைவின் முதல் நகர்வுதான் ஆரண்யப் பாதையில் ராமனை அணுகியது.
அவளது திட்டவரைவு என்ன?
ஏகபத்தினி விரதனான ராமனை காமத்தால் அணுகி, அவன் தம்பி இலக்குமணனின் கோபத்தை சம்பாதித்து, அவனால் அவமானப்பட்டுக்கொண்டு, ராவணச் சபையில் சென்று அதை ஊதிப் பெரிதாக்கி, “கேட்டாயா? உனக்கு சரி ஜோடி ஒன்றை கண்டேன். தூக்கி வரப் பார்த்தேன். ஆனால், என் மூக்கை அறுத்து துரத்தி விட்டனர் இரண்டு மானிடர்கள்” என்று அவனது அசுரக் குணத்தை உசுப்பி, அவன் நெஞ்சில் காமக்கனல் மூட்டி, சீதையைக் கவர செய்து, அதன்மூலம் ராமனோடு பெரும் பகையைக் கோத்துவிட்டு, நேருக்கு நேர் போர்க்களத்தில் மோதச் செய்து, தன் கணவனைக் கொன்று தன்னை மூளியாக்கியவனை ‘சாய்த்தே விடுவது’. அதன் மூலம் அசுரக் குலத்தையே அழிப்பது. இனியொரு முறை வல்லாதிக்க வெறியினால் அப்பாவி உயிர் ஒன்று போகாமல் காத்து, உலகத்தை நிம்மதியாக வாழ விடுவது.
இதுதான் சூர்ப்பணகையின் மறைமுகமான திட்டவரைவு.
இதை ஆரம்பத்தில், சூர்ப்பணகையை அறிமுகப்படுத்தும்போதே திட்டவட்டமாக கம்பர் சொல்லி விடுகிறார்.
‘நிருதர் வேந்தனை மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்…’
அதாவது, ‘அரக்கர்களின் தலைவனான ராவணன் மட்டுமல்லாது அவன் குலத்தையே வேரோடு அழிக்க உறுதி பூண்டவளாக ராமனை அணுகுகிறாள்’ என்கிறார்.
அவளது குறிக்கோள், ஈடு இணையற்ற மகா சக்தி ஒன்றினோடு, ராவணனுக்கு தீராப் பகையை ஏற்படுத்திக் கொடுத்துவிட வேண்டும்… அவ்வளவே. பிறகு, காவியத்தில் ராமனைப் பார்த்து சூர்ப்பணகை பேசும் காமக்காதல் மொழிகள் எல்லாம் என்ன என்றால்… அவையெல்லாம் வெறும் நாடகமே. அதாவது, தன் மனதில் இருக்கும் நீண்ட திட்டம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணியவள், வெளியில் அதற்குக் காமம் என்னும் முலாம் பூசிக் காட்டினாள். நாடகத்தை நீட்டினாள் என்பதே எனது துணிபு.
ராம கதாபாத்திரம்கூட இதை செய்தது.
ராமன் தன்னை அணுகும் சூர்ப்பணகையை ஒரே சொல்லில்கூட வெட்டி விட்டிருக்கலாம். ஆனால், தன் பங்குக்கு இப்படி நீட்டுகிறான்.
‘அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்’ என்றான்.
சூர்ப்பணகையைப் பார்த்து, “பெண்ணே, நீயோ பிராமணக் குலத்தை சேர்ந்தவள். நானோ க்ஷத்திரியக் குலத்து அரசன். இது சரிவராதே…” என்று இழுக்கிறான். ஒருவேளை, ஒரே குலமாக இருந்தால் ஓடிப் போயிருப்பான் என்றா இதற்கு அர்த்தம்? அப்படியல்ல, கால நாடகத்துக்கு ராம கதாபாத்திரத்தின் பங்களிப்பாகவே அதைக் கொள்ள வேண்டும்.
மேலும் தொடர்கிறான்…
‘ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில் ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந்தவர்கள்; அன்னார் தருவரேல், கொள்வேன்…’
அதாவது, “பெண்ணே, உன் அண்ணன்மார்களில் ஒருவன் மூன்று உலகுக்கும் தலைவன் என்கிறாய். இன்னொருவனோ, நீங்காப் பெரும் செல்வம் கொண்ட குபேரன் என்றும் சொல்கிறாய். அவர்கள் வந்து உன்னை எனக்கு கன்னிகாதானம் செய்து தராமல், நானாக எப்படி துணிந்து உன்னை மணம் முடிப்பது?”
இதற்கு என்ன பொருள்? கன்னிகாதானம் செய்து கொடுத்தால் மணக்க ராமன் தயாராக இருந்தான் என்றா பொருள் கொள்வது? அப்படியென்றால், சூர்ப்பணகையின் மாய அழகில் ராமன் மயங்கி விட்டான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
இல்லை, இல்லை, ‘ராமன் அவளோடு விளையாடிப் பார்த்தான்’ என்று தானே உபன்யாசகர்கள் சொல்வார்கள். அப்படித்தான், சூர்ப்பணகையும் ராமனோடு காமவயப்பட்டது போல நடித்தாள் என்கிறேன் நான்.
ஏன்? ராமன், தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தாமல் விளையாடலாம். ஆனால், சூர்ப்பணகை தன் மனதில் உள்ளதை மறைத்து நடிக்கக்கூடாதா? பாத்திரங்களுக்கிடையே பாரபட்சம் பார்ப்பது காவியத்துக்கு அழகாகுமா? ஆம், ராமபாணம், ராவணன் நெஞ்சில் உருவ ஓட வேண்டும் என்பது ஒன்றே சூர்ப்பணகையின் குறிக்கோள்.
கேளுங்கள், இந்த உலகில் சொந்த அண்ணனாக இருந்தாலும் சொத்தை யாரும் விட்டுத் தர மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணுக்குப் பெரும் சொத்தாக இருப்பது அவளது மங்கலத் தோற்றம். அதை விட்டுத் தந்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்குவாள் சூர்ப்பணகை?
தன் மஞ்சளையும் குங்குமத்தையும் அகாலமாகப் பறித்துக்கொண்டு பத்து தலைகளில் சிரிக்கும் ராவணனைக் கண்டு எப்படி அவளால் பொறுத்துக் கொள்ள முடியும்? குடி கெடுத்தது மட்டுமல்லாமல், ஒரு வாழாவெட்டி வீட்டில் இருந்தால், தன் மனைவி மண்டோதரியோடு சண்டை வருமென்று, காட்டில் குடிவைத்துக் காவலும் போட்டு வைத்திருக்கும் அண்ணனின் மேல் ஓர் அபலைப் பெண்ணுக்கு சீற்றமில்லாமலா இருக்கும்?
விதவைக் கோலத்தோடு, தன் கணவனின் கொலைக்கு நியாயம் கேட்கத் தக்க தருணத்துக்காக காந்திருந்த, திட்ப நுட்பம் செறிந்த, சாதுர்யமிக்க, உறுதியானதொரு உயர்ந்த பாத்திரமாகத்தான் என் கண்களுக்கு ஜொலிக்கிறாள் சூர்ப்பணகை!
அதை ஈடேற்றுவதற்காக மட்டுமே ராமனை அணுகினாள். அவள் காட்டிய காமத்தோற்றம் வெறும் மேல் பூச்சு என்று கொள்வதுதான் அறிவுலகத்துக்கு மேன்மை சேர்க்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
கேளுங்கள், காமம்தான் முக்கியம் என்றால்… ராவணன் சீதையை தூக்கி சென்ற பின், காட்டில் தனியே உலவிவரும் ராமனைக் காண அவள் என்றேனும் முயன்றிருக்க வேண்டும் அல்லவா? அப்படியேதும் குறிப்புண்டா? தொடர்வதும், துரத்துவதும்தானே காமம்? தன் காமத்தை முறையிட மீண்டும் ராமனை அணுகியிருக்க வேண்டும் அல்லவா? அப்படியேதும் சம்பவம் உண்டா? அதன்பின் ராமன் பக்கம் அவள் திரும்பவே இல்லை என்பதுதானே காவிய உண்மை.
அப்படிப்பட்டவளைக் காமமே எண்ணமாய் திரிந்தவள், பசலைக் கசடாக புழுத்தவள் என்றெல்லாம் தூற்றுவது அறிவுடைமை ஆகுமா?
ராமனைக் கண்டு சூர்ப்பணகை காமவயப்பட்டதாக கம்பர் சொல்லும் காட்சிகளைப் படித்துக் காட்ட சிலர் முன்வரலாம். அதற்கு முன் அவள் ராமனைக் கண்ட சூழல் என்ன என்பதை நோக்கியாக வேண்டும்.
கம்பர் காட்டும் காட்சி ஒரு பனிக்காலக் காட்சி.
‘மென் முலைமேல் பனி மாருதம் புணர, ஆர் உயிர் வெந்து புழுங்குமால்…’
ராமனைக் கண்ட அந்த இரவு, பனிக்காற்று வந்து சூர்ப்பணகையின் மென் முலையை புணர்ந்ததாம். அந்நேரம் அவளது ஆவி வெந்து புழுங்கியதாம். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
ராமனின் பேரழகைக் கண்டதும் இறந்து பட்ட தன் கணவன் துஷ்டபுத்தி எனப்படும் வித்யுஜ்வாவின் நினைவு அவளுக்குள் மூண்டெழுந்திருக்க வேண்டும். அந்தப் பனிக்காலத்தில், தனிமையே துணையாய் வாழ்ந்துவரும் ஒரு விதவைக்கே உண்டான விரகதாபம் அவளுக்குள்ளும் வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றே கொள்ள வேண்டும். மற்றபடி ராமனோடு குடும்பம் நடத்த வேண்டும் என்றெல்லாம் அவள் திட்டமிட்டுக் கொண்டிருக்கவில்லை.
கம்பரே சொல்கிறார்…
‘முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம், மலை துமித்தென, ராவணன் மணியுடை மகுடத் தலை துமித்தற்கு நாள் கொண்டது…’
ராவணன் தலையை அறுப்பதற்கான முகூர்த்த வேளையை சூர்ப்பணகை தன் முலையறுக்கப்பட்டபோதே முடிவு செய்து விட்டாள்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, முலையறுக்கப்பட்ட நேரத்திலும் அவள் மனதில் நின்றது ராவணாகாரமே!
ஆக, அவள் சிந்தையெல்லாம் சூழ்ந்திருந்தது ராமன் இல்லை. காமம் இல்லை. மாறாக, ராவணன். அவன் மேல் அவள் கொண்ட தீராப் பழி என்றே உறுதியாகிறது.
ராவணன் வதைப் படலத்தில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்து புலம்பும் வீடணன் கூட…
‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்; பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி; நெடும்பாரப் பழி தீர்ந்தாளே…’
“பல்லால் நாக்கைக் கடித்துக் கொண்டு பழி தீர்த்துவிட்டாள் சூர்ப்பணகை…” என்றுதான் முடிக்கிறான்.
சூர்ப்பணகை பிறந்தபோது, அவளது நீண்ட அழகிய கண்களைக் கண்டு சொக்கிப்போன அவளது பெற்றோரான விச்சிரவாவுவும் கேகசியும் இவளுக்கு ஆசை ஆசையாய் ‘மீனாட்சி’ என்று பெயர் சூட்டினார்கள் என்கிறார் கம்பர். காமவல்லி என்றொரு பெயரும் இவளுக்கு உண்டு. அப்படிப்பட்டவள், ராமனுக்கு முன்னால் எப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் பாருங்கள்…
‘உயரும் விண்ணிடை; மண்ணிடை விழும்; கிடந்து உழைக்கும்; அயரும்; கை குலைத்து அலமரும்; ஆர் உயிர் சோரும்; பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட பிழை’ எனப் பிதற்றும்…’
ஐயோ என்று அலறியபடியே வானத்துக்கு எம்பிக்குக் குதிப்பாள். வேகமாகத் தலையாட்டியபடியே மீண்டும் மண்ணில் வந்து மோதி விழுவாள். தன் கைகளால் மண்ணை ஓங்கி அடித்தபடியே புழுதிபறக்க வைப்பாள். முன்னால் சாய்ந்து தலையைத் தொங்கப் போட்டபடியே கொஞ்ச நேரம் பெருமூச்சு விட்டுக் கொள்வாள். கைவிரல்களை மடக்கி, சொடுக்கி தன் நிலையை நொந்து கொள்வாள். தன் உயிரே போகும்படிக்கு மூளையை தன் மனதால் நசுக்கிக் கொள்வாள். அங்கிருந்து எழுந்து கொஞ்ச தூரம் நடப்பவள், மீண்டும் தரையிலமர்ந்து பழைய புலம்பலை தொடர்வாள். பெண்ணாய்ப் பிறந்ததால்தானே நான் எங்கோ ஒரு காட்டில் இப்படிக் கிடந்து அல்லாடுகிறேன் எனப் பெருங்குரலில் பிதற்றுவாள்.
ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு காமப் புறக்கணிப்புக்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள் சூர்ப்பணகை? அல்ல, அல்ல.
ஓங்கும் தனது அழுகுரல் எங்கெணும் கேட்க வேண்டும். அந்த வனமெங்கிலும் தன் ஒப்பாரிக்கு சாட்சிகளை உண்டாக்க வேண்டும். ராவணன் சபையில் அந்தச் சாட்சிகளை எல்லாம் அடுக்கி சொல்ல வேண்டும். சம்பவ இடத்துக்கு ராவணன் வந்து ‘மானிடரால் மூக்கறுபட்டு அழுதாளா இந்த சூர்ப்பணகை….’ என்று கேட்டால், ‘ஆம்…’ என்று சொல்ல அங்கு ஒரு கிளிப்பிள்ளையேனும் இருந்தாக வேண்டும். குறிப்பாக, ராவணனை பழி வாங்கும் நாடகத்துக்கு ஆழமாதோர் அஸ்திவாரமாக அமைந்தாக வேண்டும் என்பதால்தான் அந்த குதி குதிக்கிறாள். காமம் அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல.
திருவள்ளுவர் சொல்லுவார்…
‘மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பின்றி
தும்மல்போல் தோன்றி விடும்’.
“காமத்தை மறைக்க வேண்டும் என்று ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அது ஒரு தும்மலைப் போல சட்டென்று வெளிப்பட்டு விடும்”.
போர்க்களத்தில்… “இன்று போய் நாளை வா…” என்று ராமன் சொல்ல, வெறுங்கையோடு அரண்மனை திரும்பும்போதிலும், ராவணன் மனதில் குடிகொண்டிருந்தது அந்த நீச்சக் காமம்தானே?
‘மெல் இயல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்…’
ஆக, படுகளத்திலும் ராவணன் மனதில் குடிகொண்டிருந்தது காமம். காரணம், அதுவே அவனது ஒரே நோக்கம்.
தன் மூக்கும் முலையும் அறுபட்ட போதிலும், சூர்ப்பணகை மனதில் குடிகொண்டிருந்தது ராவணாகாரம். காரணம், அசுரக் குடியழிப்பதே அவளது ஒரே நோக்கம்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘ராமாவதாரத்தின் நோக்கத்தை முன்னின்று செலுத்திய உன்னதப் பாத்திரம், சூர்ப்பணகைப் பாத்திரம்’ என்றே கூட சொல்லிவிட முடியும்!
ஆக, ராவண வதத்தின் சூத்திரதாரி என்னும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தை, அரக்கி என்றும் காமக் கிழத்தி என்றும், கொடியவள் என்றும் தூற்றிச் சொல்வது அறியாமையாகவே கொள்ளப்படும். அதனால்தான் கேட்கிறேன். முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டில் ஒன்றான சீதை என்னும் கதாபாத்திரத்தைக் கடைசிவரை கொண்டுசென்று பட்டாபிஷேகமும் செய்துவைத்து அழகு பார்ப்பவர்கள் சூர்ப்பணகை பாத்திரத்துக்குக் கொடுத்த முடிவென்ன?
தன் மங்கலச் சொத்தை அபகரித்ததால் தன் அண்ணனை வெறுத்தாள். அதனால், மறைந்திருந்து தொடுத்த போரில் அழித்தாள். சரி, அதற்கு முன்பும் – பின்பும் என்ன செய்திருப்பாள்?
அசோக வனத்துக்கு சீதை வந்த பிறகு அவளுக்கு பாதுகாவலாக இருந்தது வீடணனின் மகள் திரிசடை என்கிறார்கள். அந்த நேரத்தில் சூர்ப்பணகை சும்மாவா இருந்திருப்பாள்? போர் தொடங்கும் வரை, அதற்கான சூர்ப்பணகையின் தொடர் கவனிப்பு (Follow up) என்ன?
போர் முடிந்து சீதை அயோத்தி திரும்பும் வரை அவளது பாத்திரம் என்ன செய்து கொண்டிருந்தது? வீடணன் முடி சூட்டும் படலத்திலும் கூட அவளது பாத்திரத் தோற்றமில்லையே? ஏன்? காவியம் நெடுகிலும், அதற்குக் காரணமானதொரு முக்கியக் கதாபாத்திரத்தைக் கண்டு கொள்ளாமலேயே விட்டது நியாயம்தானா?
ஒருவேளை, போர்க்களத்தில் ராவணன் சாயும் காட்சிக்கு முன்னால், அதற்குக் காரணமான சூர்ப்பணகைப் பாத்திரத்தையும் சாய்த்துக் காட்டியிருந்தாலும் சமாதானப்பட்டுக் கொள்ளலாம். சூர்ப்பணகை கொல்லப்பட்டதாகவும் பதிவில்லையே? யாதொன்றும் சொல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இப்படிப் போகிறபோக்கில் விட்டுவிடுவது சரிதானா?
“ஏன், என் பாத்திரத்தை முழுமைப் படுத்தாமல் அப்படியே அம்போவென விட்டு விட்டார்கள்” என சூர்ப்பணகை என்னும் அந்தக் கதாபாத்திரத்தின் ஆன்மா யுக யுகாந்திரமாக ஏங்கிக்கொண்டேதானா இருக்க வேண்டும்?
எனக்குத் தோன்றும் ‘மனச்சித்திரங்கள்’ யாவும் சூர்ப்பணகையின் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டுகின்றன. அசோக வனத்து சீதைக்கு தாயாய், தோழியாய் நின்றவள் சூர்ப்பணகை என்கின்றன.
ஆம், தன்னால் வகுக்கப்பட்ட வியூகங்களில் அப்பாவியாய் சிக்கிக்கொண்ட சீதைக்காக, சூர்ப்பணகையாள் அகத்திலும் – புறத்திலும் போராடும் காட்சிகள் மனத்திரையில் தோன்றி கண்ணீர் மல்க தொழ வைக்கின்றன.
தானும் ஒரு பெண்தான் என்னும் முறையில், உமையம்மை என்னும் இயற்பெயருடைய சூர்ப்பணகை, சீதைக்கு உரிய பிராயச்சித்தங்களை நிச்சயம் செய்திருப்பாள் என்றே எண்ணுகிறேன். சூர்ப்பணகையின் உண்மை உள்ளம் அறிந்த சீதை, அவளை உற்ற தோழியாகவே கொண்டிருப்பாள் என்றும் நம்புகிறேன்.
ஈழத்தலத்து நாயகி சூர்ப்பணகை, சீதைக்கு என்னவெல்லாம் நல்லன செய்திருப்பாள், எந்த வகையில், எங்கெங்கெல்லாம் செய்திருப்பாள் என்பதைக் காட்சிகளாக மனக்கண்ணில் கண்டு எழுத, எழுத ஆன்மா கசிந்து, துவண்டு போகிறது. ஒரு நல்ல கதாபாத்திரத்தை மீட்டெடுக்கிறோம் என்னும் நிம்மதி நெஞ்சில் நிறைகிறது.
நாட்டிய நாடகமாக்கும் எண்ணத்தில் ஸ்கிரிப்ட் செய்து கொண்டிருக்கிறேன். அனிமேஷன் தொடராகவும் வரும்.
சூர்ப்பணகையாள் அருள்புரியட்டும்!
கட்டுரையாளர் குறிப்பு:
ஸ்ரீராம் சர்மா…
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
�,”