பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

கிரிக்கெட் உலகில் இன்று மிகப் பிரசித்தமாக இருக்கும் ஷாட் “ரிவர்ஸ் ஸ்வீப்”.

அந்த ஷாட்டை முதன்முதலில் கண்டுபிடித்து ஆடியவர் ஒரு தமிழர். பெயர் பி.கே.தர்மலிங்கம்.

சகிக்க முடியாத கறுப்பு நகைச்சுவை என்னவென்றால் அப்படி அவர் ஆடிய அந்த ரிவர்ஸ் ஸ்வீப் முறை கிரிக்கெட் விளையாட்டைக் களங்கப்படுத்திவிட்டதாக எல்லோரும் குற்றம்சாட்ட அன்றிலிருந்து கிரிக்கெட் ஆடுவதையே நிறுத்திக்கொண்டவர் தர்மா.

அதன்பின் அவர் இந்திய அணிக்கு ஃபீல்டிங் கோச்சாகி, உலகக் கோப்பையை நமக்குப் பெற்றுத் தந்த கபில்தேவின் அந்தப் புகழ் பெற்ற ரன்னிங் கேட்சுக்குக் காரணமாகி நின்றதெல்லாம் தனிக்கதை.

இளம் வயதில் இந்திய விமானப் படையில் பணியாற்றி, அந்த அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தவர் தர்மா.

ஒருமுறை ரஞ்சி ட்ராஃபி போட்டியில் மிகத் தாழப் பறந்துகொண்டிருந்தது அவரது டீம். 8ஆவது ஆட்டக்காரராகக் களமிறங்கி ஆக்ரோஷமானதொரு செஞ்சுரி அடித்து 162 ரன்களோடு மீண்டும் IAF டீமை உயரே பறக்கவைத்தவர் தர்மா.

கபில்தேவ், மதன்லால் போன்றவர்கள் அவரை தர்மாஜி என்று பணிவோடு அழைத்துக் கொண்டாடுவார்கள். ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், டபுள்யூ.வி.ராமன், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற எண்ணற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டின் நெளிவு சுளிவுகளைச் சொல்லிக் கொடுத்தவர்.

எத்தனையோ சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தர்மா.

ஆம், இந்தியாவில் முதன்முதலில் பெண்களை கிரிக்கெட் பேட் பிடிக்க வைத்த பெருமை தர்மா அவர்களுக்கே உண்டு.

எண்பதுகளில் சுதா ஷா என்னும் பெண் கிரிக்கெட்டரைத்தான் முதன்முதலில் தயார் செய்தார். சுதா ஷாவின் பெயரை தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷனில் (TNCA) பதியவைக்க அழைத்துச் சென்றபோது தர்மாவுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது…

“இதென்ன தர்மா..? ஆண்கள் ஆடும் லீக்கில் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்துகிறீர்கள். இவர் பெயரை எப்படிப் பதிவது….” என்று நிர்வாகிகள் முரண்டு பிடித்து மறுக்க…

“ஐயா, தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் என்றுதானே பெயர் வைத்திருக்கிறீர்கள்..? என் ஸ்டூடன்ட் பெண்ணென்றாலும் இவர் ஆடுவதும் கிரிக்கெட்தானே..? மறுக்காமல் பெயரைப் பதியுங்கள்..!” என்று விடாமல் வாதாடி, சுதா ஷாவின் பெயரைப் TNCA வில் பதிந்ததோடு மட்டுமல்லாமல் அவரை மூன்றாம் டிவிஷன் சிவாஜி கிரிக்கெட் கிளப்பில் ஆடவைத்த பின்புதான் ஓய்ந்தார் தர்மா.

அதன் பிறகுதான் தனியாக தமிழ்நாடு விமன்ஸ் கிரிக்கெட் அசோஸியேஷன் என்ற ஒன்றே உருவானது. எண்ணற்ற பெண்கள் கிரிக்கெட்டுக்குள் வந்தார்கள்.

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கோச்சாகப் பணியாற்றி பற்பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் தர்மா. இன்று சத்தமில்லாமல் உலக சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது பெண்கள் கிரிக்கெட் அணி.

பி.கே.தர்மலிங்கம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் கிரிக்கெட் கோச்சிங் சென்டர் என்ற ஒன்றைத் தொடங்கியவர். இன்று ஆயிரக்கணக்கான கிரிக்கெட் கோச்சிங் சென்டர்கள் இருந்தாலும் அத்தனைக்கும் ஆதிமூலம் தர்மா அவர்கள்தான்.

பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ப்ளேயர்கள் அவரால் உண்டாக்கப்பட்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

அடையாறு சிஷ்யா பள்ளியில் அவர் நெட்ஸ் அமைத்து பயற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் ஏதோ ஓர் ஆசையில் நானும் கொஞ்ச நாள் அவரிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். எப்படியும் அப்போது அவருக்கு வயது 60 போல இருந்திருக்கும்.

நூற்றுக்கணக்கான கிரிக்கெட் மாணவர்கள் காத்திருக்க, வெள்ளைத் தொப்பியோடு பந்தை டாஸ் செய்துகொண்டே கிரவுண்டில் இறங்கி வரும் தர்மாவின் ஸ்டைல் பசித்த புலியை ஒத்திருக்கும்.

படு ஸ்ட்ரிக்ட். கலர் ட்ராக் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும்… “எங்கடா வொய்ட்ஸ்… கிரிக்கெட்னா டிஸிப்ளின் முக்கியம்… கெட் அவுட்” என்று உறுமியபடி வெளியேற்றிவிடுவார்.

அவ்வளவு சீக்கிரம் பேட் அப் செய்து விடவோ, பௌலிங் போடவோ போய்விட முடியாது. “பாலும் பேட்டும் மட்டும்தான் கிரிக்கெட்டா..? வந்து நில்லுங்கடா…” என்பார். பெண்டு கழற்றுவார்.

ஆளுக்கு பத்து கேட்ச் கொடுப்பார் ஒன்பதாவது கேட்சை விட்டுவிட்டால் முதலிலிருந்து ஆரம்பி என்பார். கிரவுண்டைச் சுற்றி ரவுண்டுகளாக ஓட விடுவார். நாக்குத் தள்ள, சலித்த முகத்தோடு கால்களை உதறிக்கொண்டு நின்றால்…

“வாட் மை டியர்..? சாப்பிடும்போது வாய் வலிக்குதா… விளையாடும்போது எப்படிடா கால் வலிக்கலாம்..?” என்றபடி பந்தைத் தூக்கி எறிபவர்…

“ஒன்… டூ… த்ரீ…” என்று ஆரம்பித்துவிடுவார். பத்து எண்ணுவதற்குள் ஓடிப் போய் எடுத்து கரெக்ட்டாக த்ரோ செய்தாக வேண்டும்.

ஒருவன் நன்றாக கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்துவிட்டால் அள்ளி அணைத்துக்கொண்டுவிடுவார் பி.கே.டி! எத்தனையோ இயலாத பசங்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுத்து கிரிக்கெட் கிட்டையும் வாங்கிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்.

வெளிமாவட்டத்தில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான திறமையாளர்களை கிரிக்கெட்டின் வழியே உயர்ந்த வேலையில் அமர்த்தியிருக்கிறார்.

அவர் கைப்பட்டால் போதும் என்று கோச்சிங்குக்கு ஓடிவந்தார்கள். கிரிக்கெட்டில் அவர் கொடுக்கும் டிப்ஸ் எல்லாம் ஹைக்கூ கவிதைகளைப் போல நறுக்கென்று இருக்கும்.

**அவுட்டாகாமல் இரு போதும்; ரன் தானாக வரும்.**

**பிடித்து முடிக்கும்வரை எந்தக் கேட்சும் எளிதானதல்ல.**

**எப்போதும் முதல் ரன்னை மிக வேகமாக எடுக்கப் பார்.**

**உன் தலை கேமரா போல; ஆடும்போது அசைத்துவிடாதே.**

தர்மா சாரின் ஆங்கிலப் புலமையும் சைட் க்ளான்ஸ்போல வெளிப்படும் அவரது நகைச்சுவை உணர்வும் அலாதியானவை.

“சார், கிரிக்கெட்டோட சயின்ஸை நீங்க சொல்லிக் குடுக்குறா மாதிரி ஒரு சீரியல் எடுக்கலாமே சார்…” என்றேன்.

“கரெக்ட். உனக்கு அதுதான் சரியா வரும். அப்படியே செய்…” என்றார்.

விஜய் டிவியில் “கிரிக்கெட் கனவுகள்” என்ற பெயரில் 26 எபிஸோட்களுக்கு கிரிக்கெட்டின் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்தார். முதல் ஸ்போர்ட்ஸ் சீரியல் என்னும் பெருமை அதற்குண்டு.

சென்னை சேப்பாக்கம் கிரவுண்டில் அவரை வைத்து ஷூட் செய்த அந்த நாட்களில் சரியாக அமையும்வரை விடாமல் பல டேக்குகள் எடுப்பேன்.

“என்னப்பா சிஷ்யா..? கிரவுண்டுல ஓடவிட்டதுக்கு பழி வாங்குறியா?” என்றபடியே கையில் இருக்கும் பந்தை கேமிரா லென்ஸின் மேல் சுண்டி விடுவார்.

பதைபதைத்துப் பாய்ந்து அதைப் பிடித்துவிடும் என்னைப் பார்த்து, “இப்படி ஒரு நாளாவது என் நெட்ஸ்ல புடிச்சிருக்கீங்களாடா..?” எனக் குழந்தைபோல விழுந்து விழுந்து சிரிப்பார்.

தன் 84ஆம் வயதுவரை கிரிக்கெட்டையே சுவாசித்து வந்த சாதனையாளர் தர்மா கடந்த 2ஆம் தேதி மறைந்தார்.

பேரிழப்பான அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு கிரிக்கெட் உலகம் கசிந்து அழுதது. பெண்கள் கிரிக்கெட் உலகம் விம்மியது.

தர்மா சாருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். அவரது பெயரை சேப்பாக் மைதானத்தின் ஏதாவது ஒரு கேட்டுக்கு நிச்சயம் சூட்ட வேண்டும் எனப் பலரும் பலவிதமாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த அந்தப் பலாத் தோப்புத் தெருவைக் கடந்து அவரது எளிய வீட்டுக்குள் மெல்ல நுழைந்தேன்.

குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூண்டுக்குள் வெய்ட் அண்ட் வொயிட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார் தர்மா சார்.

மரணக் களை சிறிதும் அற்ற அவரது அழகிய முகத்தை நெகிழ்ந்த நினைவுகளோடு தரிசித்துக்கொண்டிருந்தேன்.

நெற்றில் பட்டையாக விபூதி பூசியிருந்தார்கள்.

அவரது நெற்றியில் அந்த மூன்று விபூதிக் கோடுகளும் கண்ணுக்குத் தெரியாத தேர்டு அம்பயருக்குக் காத்துக்கொண்டிருக்கும் ஸ்டம்புகள் போலவே தோற்றமளித்தன.

சற்றே திறந்திருந்த அவரது வாயும் அதில் தெரிந்த எக்ஸ்பிரஷனும் “HOW’S THAT ?” என்பது போலவே இருந்தது.

காலம் அந்த துரோணாச்சாரியாரைத் தன் கௌரவ பெவிலியனுக்குள் அழைத்துக்கொண்டது.

வாழிய தர்மா சாரின் நீடு புகழ்!

 

**

மேலும் படிக்க

**

 

**

[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு…. நடப்பது என்ன?](https://minnambalam.com/k/2019/06/06/72)

**

 

**

[ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/06/05/47)

**

 

**

[விஜய்க்கு இது முதன்முறை!](https://minnambalam.com/k/2019/06/05/16)

**

 

**

[இளையராஜா பாடல்களுக்கு தடை!](https://minnambalam.com/k/2019/06/04/57)

**

 

**

[ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!](https://minnambalam.com/k/2019/06/05/24)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share