jசமையலறைக்குள் நீளும் ஆதிக்கக் கரங்கள்!

Published On:

| By Balaji

மு.இராமனாதன்

ஆனால் சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் [அந்த வீட்டு ஆண்களை] பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள்… சமையலறை ஒரு இடம் இல்லை. ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.”

இவை அம்பையின் வரிகள். இடம் பெறும் சிறுகதை: ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’. காலம்: எண்பதுகள். களம்: ஆஜ்மீர், ராஜஸ்தான்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் (The Great Indian Kitchen) திரைப்படத்தில் வரும் சமையலறையும் அந்த வீட்டு ஆண்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிடத்தக்க இடமில்லை. அங்கே ஆண்கள் அபூர்வமாகத்தான் எட்டிப் பார்ப்பார்கள். படம் Nee-stream என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தின் களம்: கோழிக்கோடு. மொழி: மலையாளம். காலம்: தற்காலம். இயக்கம்: ஜோ பேபி.

காலமும் களமும் மாறினாலும், உடையும் மொழியும் மாறினாலும் சமையலறை மாறவில்லை; பெண்களும் ஆண்களும் மாறவில்லை.

மொழியின் எல்லைக் கோடுகளை முறித்துக்கொண்டு படம் நாடெங்கிலுமுள்ள எண்ணற்ற பெண்களையும் ஆண்களையும் சென்றடைந்தது. அவர்கள் ஊடக வெளியைத் தம் எதிர்வினையால் நிறைத்தார்கள். படத்தைப் பார்த்த பெண்களில் பலருக்கு ஏதோ ஒரு இடத்தில் தங்களையே அதில் கண்ணுற முடிந்தது. ஆண்களில் பலருக்கும் அவ்விதமே நேர்ந்தது. பெண்களுக்குக் கழிவிரக்கமும் ஆண்களுக்குக் குற்றபோதமும் ஏற்பட்டது. சிலர் இப்போது நிலைமை மாறிவிட்டது என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்கள்.

கொதிக்கும் தேநீரில் துவங்குகிறது அவளது (நிமிஷா சஜயன்) காலை. காலைப் பலகாரம் தோசையாக இருந்தால் சட்னியும் வேண்டும், சாம்பாரும் வேண்டும். புட்டுக்குக் கடலைக் கறி. தேங்காய்ப்பூ போட்டு அவித்த இடியாப்பத்திற்கு முட்டைக் குழம்பு. பிறகு பீன்ஸ், வெண்டைக்காய் அரிய வேண்டும். வெங்காயம், பூண்டு உரிக்க வேண்டும். தக்காளி, கத்தரிக்காய் நறுக்க வேண்டும். பீட்ரூட், சேப்பங்கிழங்கு தோல் சீவ வேண்டும். இன்னும் மஞ்சள், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், மிளகு சேர்க்க வேண்டும்.

பிறகு வீடு பெருக்க வேண்டும். மெழுக வேண்டும். துணி துவைக்க வேண்டும். மாலையில், இடைப் பலகாரத்திற்கு பழம் பொரியும் உண்ணியப்பமும் நன்று. ஊற வைத்த அவலில் சர்க்கரையும் நெய்யும் சேர்த்து, கொஞ்சம் ஏலக்காயும் தட்டிப்போட்டால் மாமனார் (சுரேஷ் பாபு) பிரியமாய்ச் சாப்பிடுவார். மாலையில் விளக்கேற்ற வேண்டும். இரவு புதிதாய்த்தான் சமைக்க வேண்டும். சப்பாத்தி நல்லது. மதிய உணவில் மிச்சம் வரும். அது பெண்கள் மட்டும் சாப்பிடுவதற்கானது.

சமையலறை அவளை ஒரு கடுமையான எஜமானனைப் போல் வேலை வாங்கிக் கொண்டே இருக்கிறது. எரிவாயு அடுப்பில் இரண்டு பர்னர்கள். ஒன்றில் பருப்பு வேகிறது, இன்னொன்றில் காய்கறிகள். வெந்த காய்கறிகளை பருப்பில் கொட்டுகிறாள். இடையில், தேங்காய் துருவிக் கொள்கிறாள். தேங்காய்ப்பூவில் மல்லியையும் வரமிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்கிறாள். காய்கறியில் புளியைக் கரைத்து ஊற்றுகிறாள். அடுத்த பர்னரில் அரைத்த தேங்காய்ப்பூவை வறுக்கிறாள். இதற்கிடையில் விறகு அடுப்பை ஊதி விடுகிறாள். அதில் சாதம் வேகிறது. மாமனாருக்குக் குக்கர் சாதம் பிடிக்காது. மீண்டும் எரிவாயு அடுப்புக்கு வருகிறாள். ஒரு பர்னரில் வறுக்கப்பட்ட தேங்காய்ப்பூவை மற்றொன்றில் கொதித்து வரும் சாம்பாரில் கொட்டுகிறாள். இப்போது இன்னொரு பர்னரில் இருப்புச் சட்டியை ஏற்றித் தேங்காயெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கிறாள். அவற்றைச் சாம்பாரில் கொட்டுகிறாள். சாம்பார் மேசைக்கு வரும்போது அதில் அவள் வியர்வை மணப்பதில்லை. சாப்பிட்டு முடிந்ததும் தொட்டி நிறையவும் தொட்டியைச் சுற்றியும் தட்டுகளும், கரண்டிகளும், சட்டிகளும் கோப்பைகளும் சேர்ந்து போகின்றன.

அம்பையின் கதையில் வரும் அஜ்மீர் சமையலறையில் ஒரு குழாய் வைத்த தொட்டி இருக்கும். ஆனால் குறுகியது. ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க முடியாது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம் இருக்கும். அதனால் மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் காலடியில் ஒரு சிறு வெள்ளக்காடு சேர்ந்துவிடும்.

ஜோ பேபியின் படத்தில் வரும் கோழிக்கோட்டுச் சமையலறையிலும் தொட்டி இருக்கும். ஆனால் அகலமானது. பெரிய தட்டையும் ஒன்றிரண்டு பாத்திரங்களையும் உள்ளே வைத்துக் கழுவலாம்தான். ஆனால் அடைத்துக் கொள்ளும். பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும்போதே தண்ணீர் சேர்ந்துவிடும். அடைத்துக்கொண்ட சக்கைகளையும் பருக்கைகளையும் கைகளால் துழாவிக் களைய வேண்டும். தொட்டியிலிருந்து கீழேபோகும் கழிவுநீர்க் குழாயிலும் பழுது. அதிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் கசிந்து கொண்டே இருக்கும். அதை ஒரு வாளியை வைத்துப் பிடிக்கவேண்டும். தொட்டிக்குக் கீழ் சாக்கை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சமையலறை, ஆண்கள் தம்மை விலக்கிக்கொண்ட அந்தப்புரம். ஆதலால் இந்த அடைப்பும், கசிவும், அழுக்கும், ஈரமும், நசநசப்பும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவள் கணவனிடம் (சூரஜ் வெஞ்சிரமூடு) சொல்லிக்கொண்டுதான் இருக்கிறாள். ‘ஒரு பிளம்பரை வரச் சொல்லுங்கள்’. கேளாச் செவிகளை என்ன செய்ய?

அந்த அழுக்கை அவளால் களைய முடியவில்லை. திரவ சோப்பால் கழுவுகிறாள். ஆனால் அந்த அழுக்கு கைகளிலேயே தேங்கிவிட்டது. அல்லது அப்படிச் சந்தேகிக்கிறாள். அவளது சம்மதமின்றி நடக்கும் கலவியின் போதும் அந்தச் சந்தேகம் அவளைவிட்டு அகலவில்லை. அவள் கைகளை முகர்ந்து பார்க்கிறாள். அந்தச் சம்போகம் அவளை மகிழ்விக்கவில்லை. முருங்கைக்காய்ச் சக்கைகள், மீன் முட்கள், கலங்கிய தொட்டி, அழுக்குத் தண்ணீர் என ஒவ்வொன்றும் கொள்ளி எறும்புகளாய் மாறி அவள் மண்டையை அரிக்கிறது.

அவளுக்கு மாதவிடாய் வருகிறது. வீட்டுக்கு விலக்காகிறாள். அதாவது சமையலறைக்கும் விலக்காகிறாள். சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் பணிப்பெண் (கபனி) வருகிறாள். மூன்று நாட்கள். ஆனால் கணவனும் மாமனாரும் சபரிமலைக்கு மாலையிட்டு சாமிமார் ஆகிவிடும்போது விலக்கு ஏழு நாட்கள். கணவனின் அத்தை (ரமா தேவி) வெளியூரிலிருந்து வருகிறாள். அத்தை வந்து சேரும்போது இவள் தனியறையில் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். பதறிப்போகிறாள் அத்தை. அவள் தரையில், பாயில்தான் அமர வேண்டும், படுக்க வேண்டும். இன்னும் விதிகள் உள்ளன. படுக்கிற பாயைக் கழுவ வேண்டும், உடுத்திய துணியைத் துவைக்க வேண்டும். சாமிமார் கண்படும் இடங்களில் அவற்றை உலர்த்தக்கூடாது. தீட்டுப்பட்ட பெண்ணும் அவர்கள் திருஷ்டியிலிருந்து விலகியிருக்க வேண்டும். பயன்படுத்திய நாப்கினை எரித்துவிட வேண்டும். நன்னீரில் முழுக வேண்டும். வீணாகச் சர்ப்ப கோபம் வருத்தி வைக்காதே பெண்ணே, என்கிறாள் அத்தை.

அம்பை தனது கதையில் இப்படிச் சொல்வார்:

“ஒளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலாபுறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர்.”

ஜோ பேபியின் படத்தில் வரும் அவளுக்கு எந்த அரசோச்சும் ஆசையும் இல்லை. அவளுக்குப் படத்தில் பெயரிடப்படவில்லை. எல்லாப் பெயர்களும் அவளது பெயர்தான். எளிய வாழ்க்கைதான் அவள் விரும்பியது. கணவனும் மாமனாரும் குரலை உயர்த்துவதில்லை. கூப்பாடு வைப்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். அவர்களது ஆதிக்கக் கரங்கள் நெறிக்கிறபோது எந்தப் பொய்க் கிரீடத்திலும் அவள் மயங்கி விடுவதில்லை. அவள் ஒரு முடிவு எடுக்கிறாள்.

இந்தப் படத்தின் முடிவு ஒட்டவைத்தாற்போல் இருக்கிறது, துருத்திக்கொண்டு நிற்கிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் குறைப்பட்டுக் கொண்டனர். இயக்குநர் ரசிகர்களின் மனத்தில் நம்பிக்கைக் கீற்றை விதைக்க விரும்பியிருக்கிறார். ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பது ஒரு நம்பிக்கைதானே. மேலும் களத்தில் நடப்பது தருமத்திற்கும் சூதுக்குமான யுத்தமில்லை. இங்கே சூதுதான் தருமத்தின் வேடம் தரித்திருக்கிறது. பார்வையாளர்களிடத்தில் பல ஆண்டுகளாக இங்கே சூதுதான் பொய் வேஷம் போட்டு ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் ஜோ பேபி. பார்வையாளர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் பங்கேற்பாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அது அவர்களுக்குப் புரிகிறது. ஆகவே உறுத்துகிறது. அந்த உறுத்தல் நல்லது.

(மு.இராமனாதன், எழுத்தாளர், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share