கோவையில் அலட்சியமாக வீசப்பட்ட பிபிஇ உடையை தெரு நாய் இழுத்துச் சென்றதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், இதனைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கடந்த 6ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள், பிபிஇ எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மையத்தில் பணியில் ஈடுபட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட முழு கவச உடையை நாய் ஒன்று இழுத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக வீசப்பட்டதால் அவற்றை கொடிசியா வளாகத்திலிருந்து தெரு நாய் ஒன்று தூக்கி வரும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதுடன், மற்ற தெரு நாய்களுக்கும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிபிஇ உடை, பயன்படுத்தப்பட்ட மாஸ்க் போன்றவற்றைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று வழிமுறைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. அதிகாரிகள் இதுபோன்று அலட்சியமாக செயல்படுவதைத் தவிர்க்கச் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
**-கவிபிரியா**�,