bதாக்கரே கேட்பதும், மோடி யோசிப்பதும்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் 50:50 பார்முலா என சிவசேனா கோரி வருவதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்பதில் தாமதம் நீடித்து வருகிறது.

288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. வெற்றி பெற்ற பாஜக-சிவசேனா கூட்டணியில் பாஜக 106 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், சிவசேனாவின் ஆதரவோடு தான் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை இருக்கின்றது. ஆனால் இதற்கு சிவசேனா சில முக்கியமான நிபந்தனைகளை பாஜகவுக்கு வைத்திருக்கிறது. பால் தாக்கரேவின் பேரனும் சிவசேனாவின் யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரேவை முதல் இரண்டரை வருடங்களுக்கு முதல்வர் ஆக்க வேண்டும்; மீதியுள்ள பதவிக் காலத்தில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்; இந்த அரசின் ஐந்தாண்டுகளிலும் உள்துறை அமைச்சகம் சிவசேனாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவிடம் சிவசேனா வைத்திருக்கும் நிபந்தனை. அதனால் மோடி தரப்பில் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது தான், பாஜக ஒரு வழியாக ஹரியானாவில் ஆட்சியமைக்க ஜேஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை மனோகர் லால் கட்டர் மீண்டும் ஹரியானா முதல்வராக அறிவிக்கப்படவிருக்கிறார். ஹரியானாவைத் தொடர்ந்து தற்போது பாஜகவின் முழுக் கவனமும் மகாராஷ்டிரா மீது திரும்பியிருக்கிறது.

சிவசேனா சமபங்கு கோருவதால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் பதவியேற்பார் என ஏற்கெனவே பாஜக அறிவித்து விட்ட நிலையில், சிவசேனா தன் கோரிக்கையில் இருந்து பின்வாங்க மறுப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் பாஜக – சிவசேனா மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே புதிய ஆட்சியை ஏற்படுத்த முடியும். எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குள் செல்லாமல், நேரடியாக முடிவுகளை நோக்கி நகரும் பாஜகவிற்கு, முதன் முறையாக ஒரு கட்சியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னரே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஆஷிஷ் சேர்லா கூறும் போது, “வேறுபாடுகளைக் குறைக்க பாஜக சேனா முயன்று வருகிறது. ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க இவையெல்லாம் கட்டாயம் என சேனாவுக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று கட்சி(பாஜக) கூறியுள்ளது” எனக் கூறியிருக்கிறார்.

எனினும், எதிர்கால முதல்வர் ஆதித்ய தாக்கரே என அறிவித்து மும்பையின் பல இடங்களிலும் சிவசேனா சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது பாஜக தரப்பில் கசப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share