பறக்கும் படை சோதனை எதிரொலி: ஈரோடு ஜவுளி வியாபாரம் பாதிப்பு!

Published On:

| By admin

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மஞ்சளுக்கு மட்டுமின்றி ஜவுளிக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஈரோட்டுக்கு வந்து ஜவுளி ரகங்களை தேர்வு செய்து மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். இதற்காக அவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து ஜவுளிகளை வாங்கி செல்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளி விற்பனை மந்தமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களில் மொத்தமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய்க்கும் மேல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஜவுளி கொள்முதல் செய்ய வரும் வெளிமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாதம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும் என்று ஜவுளி வியாபாரிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share