ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: தமிழகத்தில் 33 பேர் கைது!

Published On:

| By Balaji

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி தமிழகத்தில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக என்ஐஏ ஐஜி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று (அக்டோபர் 14) தொடங்கியது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய தேசிய புலனாய்வு ஏஜென்சியின் ஐஜி அலோக் மிட்டல், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக இந்தியாவில் இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 33 பேர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19பேரும், கேரளாவில் 17 பேரும், தெலங்கானாவில் 14 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “கேரள மற்றும் தமிழ்நாட்டில் பதிவான மூன்று வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சஹ்ரான் ஹாசிமின் வீடியோக்களால் தாங்கள் தீவிரவாதத்திற்குள் வந்ததாக ஒப்புக்கொண்டனர். இந்த ஹாசிம், இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்த அலோக் மிட்டல், கைது செய்யப்பட்ட 127 பேரில் பெரும்பாலானோர் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பில் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் கோவை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் தீவிர சோதனை நடத்தினர். இதுபோலவே கேரள மாநிலம் கொச்சியிலும் சில இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share