கோயில் சொத்துக்களை ட்ரோன் கேமரா மூலம் புவிசார் தகவல் அடிப்படையில் கண்டறிந்து வருவதாக இந்து அற நிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதா ராஜன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்தார். அதில், “தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தையும், பிரசித்திபெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அனிதா சுமந்த், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் சொத்துக்கள் விவரங்கள், அந்த சொத்துக்கள் குத்தகையில் உள்ளதா, வாடகையில் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், கோயில் சொத்துக்களை ஆய்வு செய்யும் அறநிலையத் துறையினருக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வழங்க வேண்டும் என கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.
இன்று(ஜூன் 19) நடந்த வழக்கு விசாரணையின்போது இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் காரணமாக கோயில் சொத்துக்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கோயில் சொத்துக்களை கண்டறிவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அக்குழுவினரை கொரோனா பரவலால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை. அதற்கு மாற்றாக ட்ரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படமெடுக்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான நிலம் அல்லது கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து நீள, அகல, உயர அடிப்படையில் அறிந்துகொள்ளும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி சார் தகவல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
கோயில் சொத்துகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும், ஜி.ஐ.எஸ். விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். துல்லியமான விவரங்களுடன் இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்” என அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,