உலகம் முழுவதும் பெரும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை அடைந்துள்ளது. படித்தவர் முதல் படிக்காதவர் வரை எல்லோர் கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள பல குடும்பங்களில் சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து விடுகிறார்கள். மேலும் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து இருக்க வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செய்திகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் செயலியாக டெலிகிராம் செயலி உள்ளது. இந்த செயலி கடந்த 2021ஆம் ஆண்டில் 1 பில்லியன் பதிவிறக்கங்களை கடந்தது. வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக டெலிகிராம் செயலி பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் உள்ளதைவிட டெலிகிராமில் அதிக வசதிகள் உள்ளன. தனது பயனர்களுக்காக அவ்வப்பொழுது அப்டேட்களை வழங்கி வருகிறது டெலிகிராம். இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்றை டெலிகிராம் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெலிகிராம் செயலி இதுவரை பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. குறிப்பாக ஸ்டிக்கர்ஸ் மற்றும் ஸ்மைலிகள் மிகப் பிரபலம். பிரபல சினிமா வசனங்கள், பிரபல வாக்கியங்கள் புதுப்புது விஷயங்களை அவ்வப்போது பயனர்களுக்கு வழங்கி வந்தது டெலிகிராம். இந்நிலையில் டெலிகிராம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ், “செயலியில் பிரீமியம் கட்டண பிளான் அறிமுகப்படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இனி டெலிகிராமில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகளை, பிரீமியம் பிளான் மூலம் கட்டணம் செலுத்தி தான் பயனர்கள் உபயோகிக்க முடியும். இந்த பிரீமியம் பிளான் இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்பொழுது டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லாமல் பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.