தெலங்கானா மாநிலத்தில் கடந்த 5ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும், போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஎஸ்ஆர்டிசி) தொழிற்சங்கங்கள் தொடர்ந்து 15 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனப் போராட்டம் ஆரம்பமான நாட்களிலேயே காலக்கெடு விதித்தார். அதன் பின்னரும் போராட்டம் தொடர்ந்ததால், முதல்வர் கொடுத்த காலக்கெடுவுக்குள், பணிக்குத் திரும்பாத 48,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்கள், அரசாங்கம் அவர்களை பணிநீக்கம் செய்ததிலிருந்து, கடந்த வாரம் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், நான்கு ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று (அக்டோபர் 19) மாநிலம் தழுவிய போராட்டத்துக்குப் போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தனியார் போக்குவரத்து ஊழியர்கள், லாரி, ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஊழியர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டிஎஸ்ஆர்டிசி தொழிற்சங்கத் தலைவர்களும் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். டிஎஸ்ஆர்டிசி ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜி ரெட்டி, நேற்று பந்த் தொடங்குவதற்கு முன்பே, ஹைதராபாத் நகர காவல் துறையினர் பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களை, தங்கள் வீடுகளிலிருந்து அழைத்துச் சென்று காவலில் எடுத்து விசாரித்தனர் எனக் கூறியுள்ளார். இதனால் பதற்றம் அதிகரித்தது.
நேற்று காலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் 12 மணி நேரம் நீடித்தது. மாநிலம் முழுவதும் சுமார் 50,000 வாகனங்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.
அதே சமயம், இதுவரை போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
�,