சென்னை பல்கலையில் தேர்வு முறைகேடு: குழு அமைப்பு!

Published On:

| By Balaji

சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஐந்துபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொலைதூரக்கல்வி திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. இதில் கடந்த காலங்களில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதில், 117 பேர் தொலைதூரக் கல்வி மூலம் எந்த படிப்பிலும் சேராததும், ஒருமுறை கூட பட்டபடிப்பிற்கான கட்டணத்தை செலுத்தாததும், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டை பெற்றதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், சென்னைப் பல்கலைக்கழக சட்டக்கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் மூன்று முதல் ஐந்து நபர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக சட்ட கல்வித்துறைத்தலைவரும் , சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினருமான சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சட்டக்கல்வித்துறை பேராசிரியர் வேணுகோபால், இந்தித்துறை தலைவர் சிட்டி அன்னப்பூர்ணா, பொருளியல் துறைத்தலைவர் சத்தியன், உயிர் வேதியியல் துறைத்தலைவர் மற்றும் கல்விப்பிரிவு முதல்வர் இளங்கோவன் வெள்ளைச்சாமி ஆகியோர் உள்ளனர்.

இக்குழு தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்கும்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share