தீக்குச்சி
விளக்கை ஏற்றியது
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்…..
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்
ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?”
என்று கேட்டேன்
“ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா” என்றான்….
*ஆசிரியர்கள்*
என்ற கவிக்கோவின் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாணவர்களின் ஒளி விளக்காகவும் அவர்களின் விடியலில் ஒரு சூரியனாகவும் ஆசிரியர்கள் திகழ்கின்றனர்.
இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1888ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன் தத்துவத்தில் பட்டம் பெற்றவர். சென்னை பிரசிடென்சி கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக் கழகம், டெல்லி பனாரஸ் பல்கலைக் கழகம் என பல்வேறு கல்லூரிகளில் துணை வேந்தராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின், 1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்த அவரது பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் தினத்தன்று பள்ளிகளில் ் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து, பரிசு கொடுத்து வாழ்த்துசொல்வது, மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி வைத்து பரிசு கொடுப்பது, ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டி என இன்று ஒரு நாள் பள்ளி வளாகமே களைகட்டும்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு இல்லாமல் ஆன்லைன் கிளாஸ் மூலமே வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகள் மாணவர்களை, கட்டுரைகளை எழுதி அனுப்ப சொல்லி போட்டிகளை வைத்துக் கொண்டாடியது.
இதுபோன்று ஆசிரியர்கள் மகிழ்ச்சியாய் இந்த தினத்தை கொண்டாடி வரும் அதே வேளையில், தங்களுக்கு இருக்கும் பிரச்சினை மற்றும் சிக்கல்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் கூறுகையில், ”இந்த ஆசிரியர் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அதே சமயத்தில் ஆசிரியர்களை ஊக்குவிக்காமல் நல்லாசிரியர் விருது வழங்குவதில் பழிவாங்கும் நோக்கில் அரசு நடந்துகொள்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் கலந்துகொண்ட மிகச் சிறந்த ஆசிரியர்களை, நல்லாசிரியர் விருது பட்டியலில் சேர்க்காமல் வேண்டும் என்றே திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்.
நல்லாசிரியர் விருது மாவட்டத்திற்கு 5 முதல் 10 வரை கொடுப்பதை அதிகரித்து, விருது தொகையை ஐந்து ஆயிரத்திலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபாயாக உயர்த்தவேண்டும். தேசிய விருது தமிழகத்துக்கு இரண்டு என்ற எண்ணிக்கையை மாவட்டத்திற்கு ஒன்றாக அதிகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், “ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும், குறிப்பாணை 17பி, 17இ ரத்து செய்யவேண்டும், கொரோனா தொற்று காலத்தில் பாதுகாப்போடு சுழற்சி முறையில் பள்ளிகள் இயக்க அனுமதி கொடுக்கவேண்டும், (அதாவது வாரத்தில் விடுமுறை நாளான ஞாயிறு தவிர மற்ற ஆறு நாட்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு வகுப்பு நடத்த வேண்டும்) மேல் நிலை பள்ளியில், ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும், 450 தலைமை ஆசிரியர் பணியிடமும் காலியாகவுள்ளன. அதை நிரப்பவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் தனியார்ப் பள்ளியின் முதல்வரும் எழுத்தாளருமான ஆயிஷா நடராஜன், “புதிய கல்வி என்ற பெயரில் அரசியல் மாற்றம், இந்த மாற்றம் கொண்டுவரப்போகிற கல்வி அலை ஆகிய இரண்டும் ் இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தில் கொரோனாவைவிட அச்சத்தை உண்டாக்குகிறது.
ஒரு காலத்தில் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைத் தேடிச் சென்று அவர்களைக் கண்டுபிடித்து நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவப்படுத்தினோம்.
இன்று புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில், நல்லாசிரியர் விருதுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு நேர்முகத்தேர்வு வைத்து நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறார்கள். உண்மையான நல்லாசிரியர்கள் பலரும் விருது கேட்டு விண்ணப்பிக்கமாட்டார்கள். இதனால் உண்மையான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அடையாளம் காட்டுவதில் தவறவிடுகிறோம்.
ஆசிரியர்கள் மாணவர்களிடையே, பொது வாசிப்பு, அறிவைப் போற்றுதல், அவர்களுடைய சிந்தனையை வளர்த்தல், கல்வி மீது ஆர்வத்தை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆசிரியர் தினத்தில் கடந்த காலங்களில் ஜனாதிபதி கையால் கொடுக்கப்படும் மத்திய அரசின் நல்லாசிரியர் விருது தமிழகத்தில் 40 ஆசிரியர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு மாவட்டத்திற்கு ஒன்று என 31ஆக குறைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற 2014இல் இருந்து மத்திய அரசு நல்லாசிரியர் விருதை தமிழகத்துக்கு இரண்டாகக் குறைத்து, தமிழக ஆசிரியர்களை அவமதித்துள்ளார்கள். இதை மாநில அரசும் கேட்கவில்லை, மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் மத்திய மாநில அரசுகள் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறார்கள், குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து பாடச்சொல்கிற உலகம், மயிலைப் பிடித்து காலை உடைத்து ஆடச்சொல்கிற உலகம் என்ற கதையாகத்தான் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம்” என்று வேதனை தெரிவித்தார்.
**-எம்.பி.காசி**
�,”