ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்குப் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், 2013ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 28ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், “ஆசிரியர் வேலை கிடைக்காததால், எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ஏனெனில் என் மனைவி நல்ல சம்பளத்துடன் அரசாங்க வேலையில் இருக்கிறார். என் வாழ்க்கையே போச்சு. நான் நன்றாக படிப்பவன். பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு என அனைத்து தேர்விலும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன். கணிதத்தில் 100க்கு 99 மதிப்பெண் எடுத்தேன். அப்படியிருந்தும் எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இது என் குற்றமா?” என்று கதறி அழும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புனிதா என்பவர் கூறுகையில், “ஏற்கனவே 2013ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலை கிடைக்காமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம். மீண்டும் புதிதாக தேர்வு எழுத கூறினால் தங்களால் முடியாது. ஆசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என போடப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு இதற்கான உறுதிமொழி அளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “25 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றும், அதன் பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியாமல் சிக்கித் தவிக்கும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வேலைவாய்ப்பக முன்னுரிமையையும் பின்பற்றாமல், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்கென மீண்டும் ஒரு நியமனத் தேர்வை எழுத வேண்டும் என அரசாணை 149 வெளியிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும். இது வேலையில்லாமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த பிப்ரவரி 28 முதல் சென்னையில் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**