தேயிலை மகசூல் அதிகரிப்பு: அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதி!

Published On:

| By admin

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தேயிலையைப் பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தேயிலை பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு வளர்ந்து, பசுந்தேயிலை மகசூல் வெகுவாக அதிகரித்து வருகிறது.
மேலும் தேயிலை தோட்டங்களில் கொழுந்து துளிர்விட்டு பச்சை பசேலென காட்சியளிக்கிறது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பசுந்தேயிலையை அறுவடை செய்யாவிட்டால் கொழுந்துகள் முற்றி கரட்டு இலையாக மாறி விடும் என்பதால் பல ஏக்கர் தேயிலைத் தோட்டம் வைத்துள்ள விவசாயிகள், பேட்டரியால் இயங்கும் நவீன அறுவடை எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர்.
சில விவசாயிகள் கை அறுவடை எந்திரங்கள் மூலமாக தங்களது தோட்டங்களில் வளர்ந்துள்ள பசுந்தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “தற்போது கோத்தகிரி பகுதியில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால், தேயிலையைப் பறிக்க போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக வேறு வழியின்றி சிலர் எந்திரம் மூலம் அறுவடை செய்கின்றனர். இவ்வாறு தேயிலையை அறுவடை செய்யும்போது, தேயிலை கொழுந்துகள் மட்டுமின்றி காம்பும் சேர்ந்து வெட்டப்படுகிறது. இலையுடன் காம்பு சேர்ந்து வருவதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் தேயிலைத் தூளின் தரம் குறையும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share