பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்: நஷ்டத்தில் விவசாயிகள்!

public

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கூட்டுறவு தொழிற்சாலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கியதால், பச்சை தேயிலை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கூடலூர் 2-ம் மைல் பகுதியில் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு 2,500 சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் தினமும் பச்சை தேயிலை பறித்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலையைக் கொள்முதல் செய்து, தேயிலைத் தூள் உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தினமும் சராசரியாக 40,000 கிலோ பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் சுழற்சி அடிப்படையில் சொற்ப அளவிலான பச்சை தேயிலை மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அறுவடை செய்த தேயிலையை விவசாயிகள் தரையில் கொட்டி வந்தனர். பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்துக்குகூட கட்டுப்படி ஆகவில்லை எனக் கூறி பச்சை தேயிலையைப் பறிக்காமல் விட்டுள்ளனர். இதன் காரணமாக செடிகளில் பச்சை தேயிலை இலைகள் முதிர்ச்சி அடைந்து வருகிறது.
கூட்டுறவு தொழிற்சாலையில் கொள்முதல் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். அதற்கு தொழிற்சாலையில் ரூ.5 கோடி மதிப்பிலான புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலைத் தூள் உற்பத்தி நடைபெறாததால், கொள்முதல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பச்சை தேயிலை வீணாகி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். கடந்த கோடைக்காலத்தில் வறட்சியால் விளைச்சலும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் புதிய எந்திரம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட வில்லை. தற்போது பரவலாக மழை பெய்து பச்சை தேயிலை மகசூல் அதிகரித்தது. இந்த நேரத்தில் எந்திரம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தேயிலை செடிகளும் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இதே நிலை தொடர்வதை தவிர்க்க விவசாயிகளிடம் பச்சை தேயிலையை கொள்முதல் செய்து, பிற கூட்டுறவு தொழிற்சாலை அல்லது தனியார் தொழிற்சாலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் புதிய எந்திரத்தை விரைவாக பொருத்தி இயக்க நடவடிக்கை வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

**ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.