சென்னையைத் தொடர்ந்து 3 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

Published On:

| By Balaji

சென்னை போன்று அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மூன்று மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னைக்கு கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான ராயபுரம், திரு.வி.க நகர் என மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதி, சோதனை அதிகரிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உதயச்சந்திரன். ஐஏஎஸ்., திருவள்ளூர் மாவட்டத்துக்கு பாஸ்கரன். ஐஏஎஸ்., காஞ்சிபுரம் மாவட்டத்துக்குச் சுப்பிரமணியன்.ஐஏஎஸ்., சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அன்பு ஐபிஎஸ், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வனிதா ஐபிஎஸ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

**-கவிபிரியா** .�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share