டிபி, கொரோனா பரிசோதனை அவசியம்: ஒன்றிய சுகாதாரத் துறை!

Published On:

| By Balaji

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காசநோய் (டிபி) பரிசோதனை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு இதுதொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தாலும், கொரோனா நோயாளிகள் அதிகமானவர்களுக்கு டிபி பாதிப்பு ஏற்படுவதாகச் செய்திகள் வருவதால் மீண்டும் இன்று பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் டிபி அதிகரிப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த சோதனைக்கு ஒவ்வொரு நாளும் பலர் வருவது மருத்துவர்களைக் கவலையடைச் செய்கிறது.

கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் டிபி பரிசோதனை செய்யும்படியும், டிபி நோயாளிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும்படியும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த கண்காணிப்பு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ளும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கேட்டுக் கொள்ளப்பட்டன.

இதுதவிர, டிபி – கொரோனா மற்றும் TB-ILI/SARI என்ற இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தல்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியது. இதை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தியுள்ளன.

கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், கடந்த 2020ஆம் ஆண்டில் டிபி நோய் பாதிப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது.

டிபி மற்றும் கொரோனா ஆகிய இரண்டுமே, தொற்று நோய் மற்றும் நுரையீரல்களை தாக்கக்கூடியது என்பதாலும், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் என இவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாலும் இந்த இரு நோய்களும் மேலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

மேலும், டிபி கிருமி மனித உடலில் செயலற்ற நிலையிலிருந்து, எதிர்ப்புச் சக்தி குறையும்போது பல்கி பெருகும் ஆற்றல் உடையது. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சூழலிலும், இதே நிலைதான் உள்ளது. வைரஸ் அல்லது ஸ்டிராய்டு சிகிச்சையின் காரணமாகத் தனிநபருக்கு எதிர்ப்புச் சக்தி குறையலாம்.

கருப்பு பூஞ்சை போன்று, காசநோயும், சந்தர்ப்ப பாதிப்பு என்பதால், கொரோனா பாதிப்பு ஒரு தனிநபரைத் தீவிர டிபி பாதிப்புக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share