நாஞ்சிலின் உணவுக் கலாச்சாரம் என்பது தென்தமிழகத்தின் உணவுக் கலாச்சாரமும் கேரளாவின் உணவுக் கலாச்சாரமும் ஒன்றோடு ஒன்று இயல்பாகக் கலந்தது. பல்வேறு உணவுப் பதார்த்தங்களின் பெயர்களில் மலையாள வாசனையும் கலந்தே இருக்கும். உணவுகளிலும் தேங்காய், தேங்காய் எண்ணெயின் வாசனை தூக்கலாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றே இந்த புளிக்கறி.
**என்ன தேவை?**
முருங்கைக்காய் – 5 துண்டுகள்
கத்திரிக்காய் – ஒன்று (நறுக்கவும்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிய துண்டு
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**அரைக்க…**
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 5
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
**எப்படிச் செய்வது?**
தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். ஒரு குழம்பு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். புளியைத் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலோடு உப்பு, பெருங்காயத்துண்டு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். காய்கறிகள் நன்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழம்பு லேசாகக் கொதித்து மேலே பொங்கி வந்ததும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம் போட்டு சிவந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, சூடான குழம்பில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
**[நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய்த் துவட்டல்](https://minnambalam.com/public/2021/11/15/1/plantain-thuvattal)**
.�,