தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கிப் பதிவாகி வருகிறது. இன்று மாநிலம் முழுவதும் 4,965 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 21) மாலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலத்திலிருந்து வந்த 78 பேர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று 4,965 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 50 ஆயிரத்து 55 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51,344 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 75 பேர் உட்பட இதுவரை 2,626 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை இன்று 1,130 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 88 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. இதில் 71 ஆயிரத்து 949 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,475 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூரில் 366 பேருக்கும், விருதுநகரில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும் இன்று அதிகபட்சமாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,