cபுதிதாக 3,965 பேருக்கு கொரோனா: 69 பேர் பலி!

Published On:

| By Balaji

தமிழகத்தில்  ஒரே நாளில் புதிதாக 3,965 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேர பாதிப்பு மற்றும் இறப்பு நிலவரத்தை இன்று (ஜூலை 11) மாலை வெளியிட்டுள்ளது. அதில் பிற பகுதிகளிலிருந்து வந்த 58 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு  வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து ஒரே நாளில் 3,591 பேர் உட்பட இதுவரை தமிழகம் முழுவதும் 85 ஆயிரத்து 915 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் அதிகபட்சமாக 69 பேர் உயிரிழந்ததால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று, 1,185 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  மொத்த பாதிப்பு 76,558 ஆக உள்ளது. சென்னையைத் தொடர்ந்து, திருவள்ளூரில் 346 பேருக்கும், மதுரையில் 276 பேருக்கும், செங்கல்பட்டில் 237 பேருக்கும் அதிகபட்சமாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயது விகிதாச்சார அடிப்படையில் 13 முதல் 60 வயது உடையவர்களுக்கு அதிகபட்சமாகத் தொற்று ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 1,11,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 0 முதல் 12 வயதுடைய குழந்தைகள் 6,640 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 16,299 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share