கடந்த மூன்று நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஜூன் 10ஆம் தேதி 1,927 பேருக்கும், நேற்று (ஜூன் 11) 1,875 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று இதுவரை இல்லாத அளவுக்கு, கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரப் பாதிப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ளது. அதில், கத்தார், சவுதி அரேபியா, குவைத் என வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் மகாராஷ்டிரா, கேரளா என வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 43 பேர் என மொத்தம் 1,982 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 40,698ஆக அதிகரித்துள்ளது. 6.73 லட்சம் பேருக்கு இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையும் 78ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 1,342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 22,047 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,477 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 28,924ஆக உள்ளது. இன்று மட்டும் 31 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,